மனம் மாறிய தல அஜீத் குமார்… கதைக்கு மட்டுமே இனி முக்கியத்துவம் கொடுப்பாராம்
சென்னை: நடிகர் அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்கள் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் நேர்கொண்ட பார்வை படம் போல் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகனுடைய விருப்பம் மட்டும் அல்ல, ஒரு சாதாரண சினிமா ரசிகனும் விரும்புகிறான். அப்படி ரசிகர்கள் விரும்புவது போல மசாலா படங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் அஜீத்.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு இவரது பார்வையும் வேறு திசையில் இருக்கிறது. இனி அஞ்சு பாட்டு, ஆறு ஃபைட்டு என்று உருவாகும் மசாலாப் படங்களில் நடிப்பதில்லை என்று நடிகர் அஜீத் திட்டவட்டமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த முடிவின் எதிரொலியாக இந்தியில் வெளியாகி விமர்சகர்களால், ரசிகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட 'ஆர்ட்டிக்கிள் 15' என்ற படத்தின் ரீமேக்கிலும் நடிக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த படத்துக்காக பல விதமான புது உடல் பயிற்சி கருவிகளைக் கொண்டு பயிற்சி செய்து வருகிறார்.

நேர் கொண்ட பார்வை
நேர்கொண்ட பார்வை படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் எச்.வினோத் இயக்கும் ஆக்ஷன் படம் ஒன்றில் அஜீத் நடிக்கிறார். இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டைப் படமாக தயாராகிறது. அஜித்துக்கு பிடித்தமான கார் பந்தயம் மற்றும் பைக் பந்தய காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது.

இளமையான அஜீத்
புதிய படத்துக்காக நரைமுடிகளை கருப்பாக்கி இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். உடல் எடையையும் குறைத்துள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு அஜித்குமார் நடிக்க உள்ள 61வது படம் பற்றிய தகவலும் தற்போது கசிந்துள்ளது.

கதைக்கு முக்கியத்துவம்
அந்த படம் தான் இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 என்ற படம். அதன் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது அஜித்தின் பழக்கம். இந்த ஆர்ட்டிக்கிள் 15 படத்துக்காக இன்னமும் கூடுதலாக மெனக்கெடுகிறார்.
மேலும் இந்தப்படம் சாதீய கொடுமைகளை துகிலுரித்துக் காட்டும் படமாக இருப்பதால், இந்த மாதிரியான சாதி எனும் இழிவை அடித்து துவைக்கும் வலுவான கதையை பொதுவில் கொண்டுபோய் சேர்க்கும் பெருமை அஜீத்தை எப்போதும் சாரும்.

போனிகபூர் தயாரிப்பு
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக் உரிமையும் எதேச்சையாகவோ, திட்டமிட்டோ போனிகபூர் வசமே உள்ளது. போனிகபூருடன் வினோத் சொந்தக் கதையிலும் அஜீத் நடிக்கவிருக்க, இப்போது ஆர்ட்டிக்கிள் 15 படத்திலும் தல நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

அஜீத் ஹிட்
அஜீத் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், சமூக அக்கறையுடன் கூடிய வெற்றிப்படம் என்றால் அது நேர்கொண்ட பார்வைதான். பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கருத்தைக்கொண்டு பிங்க் என்ற பெயரில் வெளியானதை, அஜீத் வேண்டி விரும்பி அமிதாப் ரோலை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்திருந்தார். வழக்கமாக அஜீத் ஏற்கும் கதாபாத்திரமே அதுவல்ல என்ற போதிலும், அஜீத் அந்த கேரக்டர் செய்வதில் உறுதியாக இருந்தார்.

பாசமான அப்பா
விஸ்வாசம் படத்தில் பாசமான அப்பாவாக நடித்திருந்தார் அஜீத். அது அவரது மகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. இனிமேல் பெண்களை கிண்டல் செய்வது போன்ற கதைகளில் நடக்காமல் பெண்களை போற்றும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜீத். அதுபோன்ற கதைகளையே கேட்கிறார்.

அஜீத் மனமாற்றம்
அஜீத்தின் இந்த மனமாற்றம் அப்படியே நீடித்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இந்தியா சினிமாவின் பெரிய ஹீரோக்களான அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் இமேஜ் என்ற வட்டத்தில் மாட்டி கொள்ளாமல் பல புதிய சாதனைகளை செய்தனர். அஜீத்தும் அப்படி செய்தால் தமிழ் சினிமா எப்பொழுதும் போற்றும். இந்திய சினிமாவும் அங்கீகாரம் கொடுக்கும். இப்படிப்பட்ட முடிவுகள் தான் ஒரு பெரிய மாஸ் ஹீரோ எடுக்க வேண்டும். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அஜீத் நடிக்க வேண்டும் என்பது ரசிகனுடைய ஆசை மட்டும் அல்ல, ஒரு சாதாரண சினிமா ரசிகனின் ஆசையும் அது தான். செய்வீங்களா தல.


Click it and Unblock the Notifications











