வெற்றி துரைசாமியின் மரணம்.. நண்பனை இழந்த சோகத்தில் அஜித்.. ஷாலினி போட்ட ட்வீட்!
சென்னை: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் விபத்து நடந்த இடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் சடலம் கிடைத்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித்குமார்,வெற்றியின் மறைவால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள பாங்கி நாலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவரது நண்பர் மற்றும் ஓட்டுநர் என மூன்று பேரும், காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் ஓட்டுனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கார் கட்டுப்பாட்டை இழந்து, சட்லஜ் ஆற்றில் விழுந்துள்ளது.

வெற்றி துரைசாமி: இந்த விபத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காரும், காருக்குள் இருந்த நண்பரும் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெற்றி துரைசாமியின் உடல் கிடைக்கவில்லை. அவரது உடலை மீட்பு குழுவினர் பல நாட்களாக தேடி வந்தனர்.
ரூ.1 கோடி சன்மானம்: வெற்றி துரைசாமியின் உடலை கண்டு பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் கொடுப்பதாக சைதை துரைசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த 6ஆம் தேதி சட்லஜ் நதியின் பாறை இடுக்குகளில் மூளையின் திசுக்கள் சில கண்டெடுக்கப்பட்டன. அது வெற்றி துரைசாமியுடையது தானா என்று தெரிந்து கொள்ள டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் தெரிய 3 நாட்கள் ஆகும் என கூறப்பட்டது.
9 நாட்களுக்கு பின் கண்டெடுப்பு: இந்த நிலையில், வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித்குமார்,வெற்றியின் மறைவால் கவலை அடைந்துள்ளார். அஜித்தின் மனைவி ஷாலினி எக்ஸ் வலைத்தளத்தில் வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் இரங்கல்: மேலும், 2021 ஆம் ஆண்டு வெற்றி துரைசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும், சிறந்த சாகசங்களுக்காகவும் என பதிவிட்டிருந்த போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக வெற்றி துரைசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











