அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்.. உறுதி செய்த பிரபலம்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கார்த்திக், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களை வைத்து லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற திரை உலகத்தை உருவாக்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஸ்டாண்ட் அலோன் படமாக கூலி படத்தை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் கைதி 2 என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ள தகவலின் படி, இவர் அஜித்துடன் இணைந்து பணிபுரிய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித்குமார் வரும் ஆண்டில் ஜனவரி மாதம் வரை கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளார். தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஜனவரி மாதத்தில் இருந்து வரும் என்றும் சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாகவும், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் ஏற்கனவே திரையுலகில் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தயாரிப்பாளர்தான் இன்னும் முடிவு ஆகாமல் உள்ளது என்றும் பலரும் பேசி வந்தார்கள்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அஜித்தின் 63 வது படமான குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அஜித்தின் பல படங்களின் ரெஃபரன்ஸை இறக்கி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருந்தார். படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்ததாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் அண்மையில் தெரிவித்தது.
அஜித் 64: அஜித் கடந்த ஒரு ஆண்டாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்ததால், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி நின்றார். இப்படி இருக்கும்போது நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் அவ்வப்போது உலா வந்த வண்ணம் இருந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் படத்தின் அப்டேட் குறித்து தெரிவித்துள்ளார்.
அஜித் - லோகி: அதாவது, " மிக விரைவில் அஜித் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்தும் உறுதி செய்யப்பட்டுவிட்டது, அறிவிப்பு விரைவில் வரும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு அஜித் ரசிகர்களையும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே பழைய பேட்டி ஒன்றில், அஜித்தை இயக்காமல், எனது திரை வாழ்க்கை முழுமை பெறாது. எனவே அவரை வைத்தும் கட்டாயம் இயக்குவேன்" என்று தெரிவித்திருந்தார்.
கைதி 2 நிலை?: இப்படியான நிலையில் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவால், அஜித்தின் அடுத்த படத்தையே லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. கைதி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனமே அஜித்தின் 64 வது படத்தை தயாரித்தால், கைதி 2 படம் தள்ளி போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











