அடங்காத அஜித் பாய்ஸ்.. அட்டகாசம் ரீ ரிலீஸில் செய்த கோமாளித்தனம்.. இது எல்லாம் பெருமை இல்லை அசிங்கம்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று அட்டகாசம். இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 20004ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றியைக் குவித்தது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றிருந்த தீபாவளி தல தீபாவளி, தல போல வருமா, இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படங்கள். இந்த படம் இன்று அதாவது நவம்பர் 28ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் செய்த சில கோமாளித்தனம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஓவர் ஆட்டம் போடுவார்கள், அதுவும் ரீ ரிலீஸ் என்றால் சலங்கை கட்டி ஆடுவார்கள். அப்படி அஜித் ரசிகர்கள் இன்றைக்கு சென்னை, கோயம்பேடு பகுதியில் உள்ள, ரோகினி தியேட்டரில் அட்டகாசம் படத்தின் ரீ ரிலீஸை கொண்டாடி வரவேற்றார்கள். தியேட்டருக்கு வெளியே, அவர்களின் கொண்டாட்டம் வழக்கமாக அஜித்தின் நடிப்பில் புதுப்படம் வெளியாகிறது என்றால் எப்படி கொண்டாடி வரவேற்பார்களோ அதேபோல் கொண்டாடி வரவேற்றார்கள்.

இப்படி இருக்கும்போது, படம் பார்க்க உள்ளே வந்த ரசிகர்கள், அஜித் திரையில் தோன்றும் காட்சியின் போது ரகசியமாக எடுத்து வந்த பட்டாசுகளை தியேட்டருக்குள் வெடித்தார்கள். பட்டாசு ரசிகர்கள் மீது விழுந்ததும் ரசிகர்கள் சிதறி ஓடும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பட்டாசு திரையின் மீது விழுந்திருந்தால் மிகப்பெரிய விபத்தே நேர்ந்திருக்கும். நல்வாய்ப்பாக விபத்து எதுவும் ஏற்படவில்லை.
காவல்துறை எச்சரிக்கை: ரசிகர்களின் இந்த அடாவடி தனத்திற்கு பின்னர், காவல்துறையினர் தியேட்டருக்குள் சென்று, படத்தை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் விடுத்தனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் இது போல நடந்து கொள்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதுபோல பலமுறை நடைபெற்றுள்ளது. ஆனால் ரசிகர்கள் மீது காவல்துறை தரப்பில் தீவிரமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.
அடிப்படை அறிவு: காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், பெரும் கூட்டமாக கூடும் இடத்தில் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவினை ரசிகர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதன் அடையாளங்கள் தான் இவை. இப்படியான கோமாளித்தனமான ரசிகர்களால் அஜித் போன்ற உச்ச நட்சத்திரத்திற்கு இழுக்கை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறார்கள். அஜித் தனது ரசிகர்களுக்கு தொடர்ந்து பல அறிவுரைகளைச் சொல்லி வருகிறார், ஆனால் அவற்றை எல்லாம் மதிக்காமல், முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ரசிகர்கள் அவர்களாகவே திருந்தினால் தான் உண்டு. இது தொடர்பான பதிவுகளும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











