Vidamuyarchi FDFS: நள்ளிரவே காவல்துறையை கஷ்டப்படுத்திய அஜித் ரசிகர்கள்.. விடாமுயற்சி கொண்டாட்டம்!
சென்னை: பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் அதிகாலை 6 மணிக்கே திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் அங்கே நள்ளிரவு முதலே முதல் காட்சி கொண்டாட்டத்தை பட்டையை கிளப்பிய நிலையில், அவர்களுக்கு போட்டியாக தமிழ்நாட்டிலும் சில திரையரங்குகளில் அஜித் குமார் ரசிகர்கள் நள்ளிரவு முதலே அலப்பறையை கிளப்பியுள்ளனர்.
துணிவு படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான நிலையில், அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து 2025ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பல தடைகளை கடந்து திரைக்கு வந்துள்ளது.

சென்னை ரோகிணி தியேட்டரில் நள்ளிரவு அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தை ஆரம்பித்த நிலையில், காவல் துறையினர் யாருக்கும் எதுவும் ஆகாமல் இருக்க பாதுகாப்பு வழங்கினர்.
விடாமுயற்சி பண்டிகை: அஜித் குமார் சொன்ன அந்த விடாமுயற்சி பண்டிகை நாள் இன்று வந்துவிட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் சிறப்புக் காட்சிக்கான அனுமதியையே கடைசி நேரத்தில் நேற்று மதியம் தான் தமிழ்நாடு அரசு வழங்கியது. அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் 2023ம் ஆண்டு வெளியான போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது தான் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்க காரணமாக அமைந்தது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் அஜித் ரசிகர்கள் நள்ளிரவு முதலே விடாமுயற்சி பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
வெறிச்சோடிய பொங்கல்: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களுக்கு எல்லாம் இதுபோன்று எந்தவொரு செலிபிரேஷனும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட மூன்று முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும் தான் மிகப்பெரிய கொண்டாட்டங்களை ரசிகர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
காவல்துறைக்கு கஷ்டம்: நள்ளிரவு திடீரென ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் திரண்டு விடாமுயற்சி படத்தின் FDFS கொண்டாட்டத்தை ஆரம்பித்த நிலையில், காவல்துறையினர் அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அஜித் ரசிகர்கள் போலீஸ் அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் அஜித் எங்க உயிர் சார் என கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. போலீஸ் அதிகாரிகளும் பொறுமையுடன் அவர்களை கட்டுப்படுத்திய காட்சிகளும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











