GBU: அர்ஜுன் தாஸ்க்கு ஆதிக் ரவிச்சந்திரன் செய்து கொடுத்த சத்தியம்.. GBU 2 கட்டாயம் இருக்கு போலயே?
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கர்கள் உலகமும் முழுவதும் ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில் படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ் அஜித்திற்கும் இயக்குநருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகர் ஆவதற்கு முன்னர், அஜித்தின் மார்க்கெட்டிங் அணியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அஜித் படங்கள் வெளியாகும்போது தியேட்டருக்குச் சென்று ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என பார்ப்பது தொடங்கி, படத்தின் மார்க்கெட்டிங்கில் பணியாற்றுவது என பல வேலைகளைச் செய்து வந்துள்ளார். இப்படியான அர்ஜுன் தாஸ் இன்றைக்கு அதே, அஜித்துடன் அவருக்கு வில்லனாக குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார் என்றால் அவரது வளர்ச்சி மற்றும் விடாமுயற்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், அர்ஜுன் தாஸ் எழுதியுள்ள கடிதத்தில், மிகவும் எமோஷனலாக சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். " இன்னும் சில மணி நேரங்கள் தான் உள்ளது. எனக்கு பதட்டமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. நான் அஜித் சாரின் படங்களுக்கு மார்க்கெட்டிங் மற்றும் புரோமோஷன் செய்து கொண்டு இருந்தவன். நான் அப்போது எல்லாம் அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் குட் பேட் அக்லி படத்தின் மூலம் அது நடைபெற்றுள்ளது.

தியேட்டர் தரிசனம்: ரசிகர்கள் அஜித் சாரின் படங்களுக்கு எப்படியான வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்க இரவு முழுவதும் பயணம் செய்து தியேட்டரைச் சென்றடைந்தது எல்லாம், எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. அப்போது எப்படி நான் தியேட்டர் தியேட்டராகச் சென்று ரசிகர்களின் வரவேற்பை கவனித்தேனோ, அதேபோல், இன்றும் அதைச் செய்யவுள்ளேன். குறிப்பாக அஜித் சாருடன் நான் தோன்றும் காட்சிகளுக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

அஜித்: என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றிகள் அஜித் சார். இந்த படம் உங்களுக்கு கட்டாயம் பெருமை சேர்க்கும். உங்களுடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளிலும் நான் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். உங்களின் தன்னடக்கம், பெருந்தன்மை, உங்களுடன் பேசியது, நீங்கள் அடித்த ஜோக்குகள், அறிவுரைகள் மற்றும் உங்களுடன் சாப்பிட்ட கேப்பிசுனோக்களை மறக்க மாட்டேன். நான் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் இப்போதும் சொல்கிறேன், ' இந்த படத்தில் நான் நடித்தது உங்களால்தான் மற்றும் உங்களுக்காகத்தான். நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று, எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சத்தியம்: அஜித் சார் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் அன்புக்கு ரொம்பவும் நன்றி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என நினைக்கிறேன். நீங்கள் அனைவரும் குட் பேட் அக்லி படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆதிக் பிரதர் உங்களுக்கு என் அடிமனதில் இருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்கள் அனைவரையும் இன்னும் சில மணி நேரங்களில் தியேட்டரில் பார்க்கிறேன்" என எழுதியுள்ளார். அர்ஜுன் தாஸின் இந்த கடிதம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் செய்து கொடுத்த சத்தியம் குட் பேட் அக்லி இரண்டாவது பாகம் குறித்த சத்தியமா? அல்லது அஜித்துடனான அடுத்த படத்திலும் அர்ஜுன் தாஸ்க்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தான சத்தியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











