ஷாலினி எனக்காக செய்த தியாகம்.. சூப்பர் ஸ்டார், தல பட்டம் வேண்டாம்.. மனம் திறந்த அஜித்
சென்னை: நடிகர் அஜித் நேற்று மாலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கையால் பத்மபூஷன் விருதை பெற்றார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. விருது பெற்ற கையோடு மகிழ்ச்சியில் இருந்த அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது தன் மனதில் இருந்த ஒட்டுமொத்த பாரத்தையும் இறக்கி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டுள்ளார். சினிமாவில் நடிப்பதோடு தனது வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் அஜித். கடந்த சில ஆண்டுகளாக எந்தவித டிவி சேனல்களிலோ அல்லது தனிப்பட்ட முறையில் யூடியூப் சேனல்களுக்கு கூட அவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகிறார். அதேபோன்று பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதும் இல்லை. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விசயங்களை செய்து வருகிறார். கார் பந்தயங்களில் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேலையில் முழு ஈடுபாட்டோடு செய்து வருகிறார். அதில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார்.

பத்மபூஷன் விருது: சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக நேற்று குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தார். அப்போது அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனுஷ்கா, மகன் ஆத்விக் அனைவரும் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காட்சிகள் வீடியோவாக நேற்று வெளியானது. மேலும், பத்மபூஷன் விருதுடன் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் அன்பை பகிர்ந்துகொண்ட காட்சிகளும் வெளியானது. இந்நிலையில், விருது பெற்ற அஜித்குமாருக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
மனதளவில் மிடில் கிளாஸ்: விருது பெற்றதைத்தொடர்ந்து பிரபல ஆங்கில செய்தி ஊடகமான இந்தியா டுடே நடத்திய நேர்காணலில் நடிகர் அஜித் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். பத்ம பூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் உணர்கிறேன். பத்ம பூஷன் என்று சொன்னால் என்னால் நம்ப முடியவில்லை. இந்த வாங்கியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன். கொஞ்சம் உணர்ச்சியாகவும் இருக்கிறது. இதுபோன்ற விருதுகளை வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது. நான் சரியான பாதையில் இருப்பது போல் உணர்கிறேன் என தெரிவித்தார்.

ஷாலினி செய்த தியாகங்கள்: மேலும், எனக்கு மிகப்பெரிய பலம் என் குடும்பம் தான். எனது பெற்றோர்கள், சகோதரர்கள், மனைவி ஷாலினி, மற்றும் எனது குழந்தைகளுக்கும் நன்றி . எனது வெற்றி தோல்வி என அனைத்திலும் உறுதுணையாக இருப்பது அவர்கள் தான். எனது மனைவி ஷாலினி எனது வெற்றிக்கு தூணாக உள்ளார். இந்த நேரத்தில் அவரை பற்றி பேச கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஷாலினியை திருமணம் செய்தபோது பிரபல நடிகையாக இருந்தார். எனக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனக்காக அவர் பல தியாகங்களை செய்துள்ளார். நான் எடுத்த எல்லா முடிவுகளிலும் பக்கபலமாக இருந்திருக்கிறார். எனக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரமும் எனது மனைவிக்கு சேரும் என அஜித் தெரிவித்தார்.
AK சொன்னால் போதும்: பட்டங்கள்: சூப்பர் ஸ்டார் தல பட்டங்கள் குறித்து பேசிய அஜித், இந்த பட்டங்களில் எனக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. சினிமாவில் நடிப்பதற்காக நல்ல சம்பளமும் வாங்குகிறேன். இந்த பட்டங்கள் எனக்கு எப்போதும் தேவையில்லை. சினிமாவை தாண்டி எனக்கு வேறு வேலைகள் பல கனவுகள் இருக்கின்றன. இதனால், அஜித்குமார், AK, அஜித் என்று என் பெயரைச் சொல்லி கூப்பிட்டாலே எனக்கு போதும். இதை தாண்டி நான் எனக்கு பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக்காெள்ள முடியுமோ; அதே அளவு சாதாரணமாக இருக்கிறேன். மக்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்தத் துறையில் வெற்றி பெற்றாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே உணர்கிறேன் என அஜித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











