Padma Bhushan: அஜித்துக்கு பத்ம பூஷன்.. விடாமுயற்சிக்கு முன்னதாகவே வந்த சூப்பரான வெற்றி மகுடம்!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினாலும் அதற்கு பதிலாக கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கே பெருமைத் தேடித் தந்தார் அஜித் குமார். இந்நிலையில், அவரை கெளரவிக்கும் விதமாக இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிப்பை ஒன்றிய அரசு சற்றுமுன் வெளியிட்டது.
அதில், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் நடிகை ஷோபனாவுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போது பத்ம விருதுகள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் தனக்கு கிடைத்துள்ள விருதுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அஜித் குமாருக்கு பத்ம பூஷன்: இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக மிகப்பெரிய நன்றி கடிதத்தை அவர் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமேல் வெற்றி: நடிகர் அஜித் குமார் சமீபத்தில், கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டு தனது அணி 3வது இடம் பெற்று வெற்றிப் பெற்ற சந்தோஷத்தை கொண்டாடினார். நடிகர் மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஜித் குமாரின் ரசிகராகவே சென்று அவரை உற்சாகப்படுத்தியதும் விஜய் வாழ்க, அஜித் வாழ்கன்னு சொல்ற நீங்க எப்போ வாழப்போறீங்கன்னு அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ் எல்லாமே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. கார் பந்தயாத்தை தொடர்ந்து பத்ம பூஷன் விருது கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் மூலமும் வெற்றியை அஜித் குமார் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி சொன்ன அஜித்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு அங்கீகாரத்தை இந்திய அரசு எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் என நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்னை உருவாக்கிய திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுக்களூக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.
என்னுடைய ரசிகர்கள் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட சந்தோஷத்தில் நன்றி கடிதம் வெளியிட்டுள்ளார். பத்ம பூஷன் விருது வென்ற அஜித் குமாருக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











