வலிமையையும் ஓடவிட்ட ஒமிக்ரான்.. ரிலீஸை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த போனி கபூர்!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹுமா குரேஷி மற்றும் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஓமிக்ரான் பரவல் காரணமாக வலிமை படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக வலிமை படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் உறுதி
அஜித்தின் வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போகுமா? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியுடன் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனும் திட்டமிட்டபடி ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் டோலிவுட் நடிகர்களான விஜய தேவரகொண்டா, நாக சைதன்யா மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியை வைத்து போஸ்டரை வெளியிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்
ஆனால், வலிமை படம் மட்டுமல்ல எந்தவொரு புதிய படமும் ரிலீசாகாது என்பது போல மீண்டும் லாக்டவுன் அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித் அனுமதிக்கவில்லை
கொரோனா காரணமாக இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டாம் என அஜித் குமார் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடிகர் அஜித் வலிமை படத்தின் ரிலீஸை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் பொங்கல் ரேசில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

சோகத்தில் ரசிகர்கள்
வலிமை திரைப்படம் எப்படி இருந்தாலும் வெளியாகி விடும் தல தரிசனத்தை திரையரங்குகளில் பார்த்து விடலாம் என நல்ல சேதிக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இப்படியொரு அறிவிப்பு வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனாலும், படம் எப்போ வெளியானாலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைப்போம் என உறுதியுடன் உள்ளனர்.

ஓடிடியில் வெளியாகுமா
வலிமை படத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப் பெரிய தொகையை பேரம் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில், வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்த பின்னர் தியேட்டரில் படத்தை வெளியிடவே தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











