ஜனாதிபதி கையால் பத்ம பூஷன் விருது வாங்கப் போகிறார் அஜித் குமார்.. எப்போ தெரியுமா?.. ரசிகர்கள் குஷி!
சென்னை: இம்மாத இறுதியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கையால் நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் குமார் கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி அவருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதற்கு நடிகர் அஜித் குமார் நன்றி கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அஜித் குமாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு நிஜமாகவே செம சந்தோஷமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஜனவரி மாதம் விடாமுயற்சி வெளியாகவில்லை என்றாலும் கார் ரேஸிங்கில் அஜித் குமார் கலந்துக் கொண்டதை காண துபாய்க்கே ஏகப்பட்ட ரசிகர்கள் படையெடுத்துச் சென்று அரங்கையே அதிர வைத்த சம்பவத்தை அரங்கேற்றினர்.

பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் இதுவரை 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி வருகிறது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா: கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிப்புகள் வெளியானது. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா மற்றும் நல்லி குப்புசாமி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், வேலு ஆசான் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இம்மாத இறுதியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஜனாதிபதி கையால் விருது: நடிகர் அஜித் குமார் ஜனாதிபதி திரெளபதி முர்மு கையால் இம்மாத இறுதியில் டெல்லியில் வழங்கப்படும் பத்ம பூஷன் விருதை பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் பிசியாக இருந்தாலும், சமீபத்தில் சென்னைக்கு வந்து தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார் அஜித் குமார். குட் பேட் அக்லி படம் தியேட்டர்களை திருவிழாவாக மாற்றியுள்ள நிலையில், அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா இருவரும் ரசிகர்களுடன் படம் பார்த்த காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், பத்ம பூஷன் விருது விழாவில் அஜித் குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி சொன்ன அஜித்: "ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு அங்கீகாரத்தை இந்திய அரசு எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் என நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக என்னை உருவாக்கிய திரைத்துறையை சேர்ந்தார்களுக்கும் என் அன்பு ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குழுக்களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு.
என்னை இந்தளவுக்கும் நேசிக்கும் ரசிகர்கள் இல்லையென்றால் எதுவுமே சாத்தியமாகி இருக்காது என்பதுதான் உண்மை. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஜனாதிபதி கையால் அஜித் குமார் விருது வாங்குவதை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











