அஜித்குமாரின் கார் ரேஸ்.. ஆவணப் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?.. விஜய் சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: அஜித்குமார் இப்போது தனது கவனத்தை ரேஸிங் பக்கம் திருப்பியிருக்கிறார். இதற்காக ஏகே ரேஸிங் என்ற பெயரில் ஒரு டீமை உருவாக்கி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை குவித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது ரேஸிங் தொடர்பாக ஆவணப் படம் ஒன்று உருவாகிவருகிறது. அதற்கு கிளாடியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அஜித்குமார் நடிக்க வந்த புதிதிலிருந்தே கார் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். அவ்வப்போது போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் அதில் பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி விபத்துக்களையும் சந்திப்பது வழக்கமானது. இதனால் பாதி நாட்கள் மருத்துவமனையில் கழிக்கும் நிலைமைக்கு அவர் ஆளானார். இனிமேலும் இரண்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தினால் சினிமா நம்மை வெளியே அனுப்பிவிடும் என்ற முடிவில் ரேஸிங்கை மொத்தமாக ஒத்தி வைத்தார்.

மீண்டும் ரேஸ் சர்க்யூட்டில்: அதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அவர்; கடந்த சில வருடங்களாக ரேஸிங் மீது மீண்டும் கவனத்தை திருப்பினார். இந்த முறை தன்னுடைய திட்டங்கள், பாதைகள் அனைத்தையும் சரியாக வகுத்திருந்தார். ஏகே ரேஸிங் என்கிற பெயரில் ஒரு டீமையும் உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பந்தயங்களில் கலந்துகொள்கிறார். சினிமாவில் எப்படி தனது தடத்தை பதித்தாரோ அதே போன்று ரேஸிலும் பதித்துவருகிறார் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
பத்ம பூஷன் விருது: இதற்கிடையே ரேஸில் கலந்துகொண்டதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அதை நினைத்து அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் ரேஸுக்காகத்தான் கடந்த ஒரே வருடத்தில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே ஏகே ஒரு வருடத்தில் இரண்டு பட ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு; அதனை நல்லபடியாக முடித்து கொடுத்ததில்லை. அடுத்ததாகா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதோடு மட்டுமின்றி; அதனை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.
கிளாடியேட்டர்ஸ் ஆவணப் படம்: சூழல் இப்படி இருக்க அவரது கார் ரேஸ் தொடர்பான ஆவணப் படத்துக்கு கிளாடியேட்டர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏ.எல்.விஜய் இயக்க; ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.எல்.விஜய் பேட்டி: இந்நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "அஜித் கார் ரேஸ் தொடர்பான ஆவணப் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அது எப்போது ரிலீஸாகும் என அஜித்தே அறிவிப்பை வெளியிடுவார். இது அஜித்தின் பார்வைதான். அவரது கனவு. மோட்டார் விளையாட்டில் ரேஸிங் சாதாரண விஷயம் கிடையாது. அது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் பணியாற்றுகிறார். பெரிய டீமே இதில் வேலை செய்கிறது. ஆவணப் படம் வரும்போது அஜித்தும், அவரது டீமும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது புரியும்" என்றார்.


Click it and Unblock the Notifications

