80 ஷோ ஓட்டுற தியேட்டர்லயே 5வது இடத்தில் அஜித்.. ரஜினி, விஜய் படங்களில் எது நம்பர் ஒன் தெரியுமா?
சென்னை: டிவி சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடும் டாப் 10 படங்களை விட பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் உருட்டும் வசூல் நிலவரத்தை விட தியேட்டர்கள் சொல்லும் டாப் 10 படங்கள் மீது தான் சமீப காலமாக மக்கள் அதிக நம்பிக்கையை வைத்து வருகின்றனர். ரசிகர்கள் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி, பிரபலங்களுக்கு பிடித்தமான வெற்றி தியேட்டர்களை தொடர்ந்து தற்போது மாயாஜால் மல்டிபிளக்ஸ் டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2023ல் அஜித்தின் துணிவு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகமான ஷோக்களை ரிலீஸ் சமயத்தில் வெளியிடும் மாயாஜால் திரையரங்கில் 5வது இடத்தை இந்த ஆண்டு பிடித்துள்ளது. மேலும், ரஜினிகாந்த், விஜய் இருவருக்கும் இடையே பல தியேட்டர்களில் இந்த ஆண்டு பலத்த போட்டி நிலவிய நிலையில், இந்த தியேட்டரில் யார் அந்த நம்பர் ஒன் சிம்மாசனத்தை பிடித்துள்ளார் என்பதையும் பார்க்கலாம் வாங்க..

5வது இடத்தில் அஜித் படம்: புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் ஒரு நாளைக்கு 80 ஷோக்கள் ஓட்டக் கூடிய தியேட்டராக சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரான மாயாஜால் உள்ளது. இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலை டாப் 10 ஆக அந்த தியேட்டர் வெளியிட்டுள்ள நிலையில், அதில் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியான துணிவு படம் 5வது இடத்தை பிடித்துள்ளது.
4 வது இடத்தில் வாரிசு: அஜித்தின் துணிவு படத்துடன் பொங்கலுக்கு போட்டியாக வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் மாயாஜால் தியேட்டரில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட படமாக 4வது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படம் ஃபேமிலி என்டர்டெயினராக வெளியாகி இருந்தது. ஆக்ஷன், மணி ஹெயிஸ்ட் என எச். வினோத் உருவாக்கிய துணிவை வாரிசு பல தியேட்டர்களில் இந்த ஆண்டு முறியடித்துள்ளது.

3வது இடத்தில் பொன்னியின் செல்வன் 2: சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு அனைத்து படங்களையும் பின்னுக்குத் தள்ளி 500 கோடி வசூல் உடன் முதலிடத்தை பொன்னியின் செல்வன் பிடித்த நிலையில், 2ம் பாகம் சற்றே சொதப்பிய நிலையிலும் 3வது இடத்தை பிடித்தது.

2வது இடத்தில் லியோ: இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படம் என சொல்லப்பட்ட விஜய்யின் லியோ திரைப்படம் ரோகிணி தியேட்டரை தொடர்ந்து மாயாஜால் தியேட்டரிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வாரிசு 4வது இடம், லியோ இரண்டாவது இடம் என இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்களை நடிகர் விஜய் தியேட்டருக்கு வரவைத்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி உள்ளார். லோகேஷ் கனகராஜ், எல்சியூ என ஓவர் ஹைப் இருந்த நிலையில், இரண்டாம் பாதி சொதப்பிய நிலையில், லியோ 2ம் இடத்துக்கு சென்று விட்டது. அது மட்டும் சரியாக இருந்தால் 1000 கோடி வசூலை லியோ எட்டியிருக்கும் என்கின்றனர்.

முதலிடத்தில் ஜெயிலர்: பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் கண்டிப்பாக சொதப்பிடுவார் என்றே ஜெயிலர் படத்துக்கு பெரிதாக ஹைப் இல்லாமல் இருந்தது. ஆனால், படம் வெளியானதும் ரசிகர்கள் ரஜினிகாந்தின் ஆக்ஷன் அலப்பறையை காண கூட்டம் கூட்டமாக கூடிய நிலையில், பல தியேட்டர்களில் இந்த ஆண்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்து என்றைக்கும் நான் ராஜா தான் என சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்த ஆண்டு இந்த போட்டியில் கமல், சூர்யா என்ன மேஜிக் செய்யப் போறாங்கன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
டாப் 10: மேலும், மாயாஜால் வெளியிட்ட பட்டியலில் விஷாலின் மார்க் ஆண்டனி 6வது இடத்தை பிடித்துள்ளது. 7வது இடத்தை சிவகார்த்திகேயனின் மாவீரன், 8வது இடத்தை ஷாருக்கானின் ஜவான், 9வது இடத்தை சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் 10வது இடத்தை மாமன்னன் பிடித்துள்ளன. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விடுதலை, போர் தொழில் உள்ளிட்ட படங்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











