விடாமுயற்சி முதல் கூலி வரை.. ஓவர்ஹைப் உடம்புக்கு ஆகாது.. அடுத்து மதராஸி என்ன பண்ண காத்திருக்கோ?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இந்த 2025ம் ஆண்டு வெளியாகப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே ரசிகர்களுக்கு அமோகமாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு படமாக வெளியாக வெளியாக அந்த எதிர்பார்ப்பு எல்லாம் சுக்குநூறாக உடைந்து ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.
மாறாக எதிர்பார்ப்பே இல்லாத படங்கள் எல்லாம் ரசிகர்களின் அன்பை பெற்று நல்ல வெற்றிப் படங்களாகவும் மாறி வருகின்றன. அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பித்து வைத்த இந்த விஷயத்தை ரஜினிகாந்தின் கூலி படம் வரை மாற்றாமல் தொடர்ந்து கொண்டே போவது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்கின்றனர்.

மற்ற மாநிலங்களில் எதிர்பார்க்கும் பெரிய படங்கள் கதையில் சொதப்பினாலும் திரைக்கதை வேகமாக கொண்டு சென்று படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கி விடுகின்றனர். ரசிகர்களும் மிகப்பெரியளவுக்கு பெரிய நடிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர்.
நல்லா இல்லைன்னா நல்லா இல்லை தான்: ஆனால், தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், அஜித், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் யார் நடித்திருந்தாலும், நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு பொது மக்கள் ரிஜெக்ட் செய்து விடுகின்றனர். அதையும் தாண்டி பிளாக்பஸ்டர் அடிக்கும் படங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கூலி அந்த வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படமும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி அஜித் ரசிகர்களை கூட திருப்தி பண்ணாமல் படுதோல்வியை சந்தித்தது.
குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பூஃப் படம் என ட்ரோல் செய்யப்பட்ட நிலையிலும் 240 கோடி வசூல் செய்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், வெற்றிப் படமாக மாறியது. ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூல் சாதனையை கூட அந்த படம் முறியடிக்கவில்லை.
வீர தீர சூரன்: சித்தா படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் 2ம் பாகம் திரைப்படமும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியீட்டிலேயே பிரச்சனை வெடித்த நிலையில், படம் வெளியான பின்னரும் ரசிகர்களை கவராமல் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது. வீர தீர சூரன் முதல் பாகம் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வெளியான ரெட்ரோ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற முடியாமல் திணறியது. ஆனால், சூர்யா தனது ரசிகர்களை கவரும் அளவுக்காவது அந்த படத்தை கொடுத்த நிலையில், கொஞ்சம் தப்பித்துக் கொண்டார்.
தக் லைஃப்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் ட்ரோல் செய்யப்பட்டது. பாக்ஸ் ஆபீஸிலும் அந்த படம் வெற்றி பெறவில்லை.
கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்போ என லியோ படத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேன்சனிலும் ஹார்பரிலும் மட்டும் ஷூட்டிங் எடுத்து ஓட்டவே ஒட்டாத ஓட்டை கதையை வைத்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் ஒரு பான் இந்தியா படத்தை கொடுக்கிறேன் பாருங்க என கடுப்பை ஏற்றிவிட்டார்.
மதராஸி இந்த நிலையை மாற்றுமா?: அடுத்த மாதம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி படம் என்ன செய்யப் போகிறதோ என்கிற கேள்விகள் தான் தற்போது எழுந்துள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என அவர் கிண்டியதையே ஜீரணிக்க முடியாத நிலையில், தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் சொதப்புவது போல சொதப்பாமல் இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தால் நல்லா இருக்கும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம். 2026ம் ஆண்டாவது ஜன நாயகன், பராசக்தி உள்ளிட்ட படங்கள் இந்த பாதையை மாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications











