Ajith: “அஜித் மாதிரி ஒருத்தர பார்க்கவே முடியாது..” ரசிகர்கள் முன்னிலையில் புகழ்ந்த சூப்பர் ஸ்டார்!
கொச்சி: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் அஜித்துக்கு ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலையாளத்தில் இளம் சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ், ரசிகர்கள் முன்னிலையில் அஜித்தை பாராட்டி பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அதில், அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள பிருத்விராஜ், அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தை பாராட்டித் தள்ளிய பிருத்விராஜ்: கோலிவுட்டின் டாப் ஹீரோவான அஜித், தற்போது தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். விடாமுயற்சி என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், அஜித்தின் 63வது ப்ராஜெக்ட் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இதனிடையே அஜித் குறித்து மலையாள இளம் சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் பேசிய வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மலையாளத்தின் டாப் ஹீரோக்களில் ஒருவரான பிருத்விராஜ், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபாஸின் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கேரளாவில் தனது ரசிகர்களை சந்தித்த பிருத்விராஜ், அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அஜித் குறித்தும் அவரது சக்சஸ் பற்றியும் கேரளாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் பிருத்விராஜ்ஜிடம் கேள்வி எழுப்பினார். மேலும், அஜித்திடம் இருந்து கற்றுக்கொண்டது பற்றியும் பிருத்விராஜ்ஜிடம் கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த பிருத்விராஜ், அஜித்தை ரசிகர்கள் முன்னிலையில் மனம் திறந்து புகழ்ந்து பேசியது வைரலாகியுள்ளது.
அதாவது, தனது ஆரம்பகால சினிமா கேரியரில், அஜித் உச்சத்தில் இருந்ததாகவும், அவரை சந்திக்க வேண்டும் என பலமுறை முயன்றதாகவும் பிருத்விராஜ் கூறியுள்ளார். பின்னர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் அஜித்தை மிக நெருக்கமாக சந்தித்தேன். அப்போது அவர் எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்பவே கேஷுவலாக என்னிடம் பேசியது வியப்பாக இருந்தது.
அவரது படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அதனை அவர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதற்கான காரணம் என்னவென்பதை அன்று தான் தெரிந்துகொண்டேன். பெரிய ஸ்டாராக இருந்தாலும் ரொம்பவே சிம்பிளாக எல்லோரிடமும் இயல்பாக பேசுவதிலும் பழகுவதிலும் அஜித் தனி ரகம். அவரிடம் இருந்து தான் பல நல்ல விஷயங்களை தான் கற்றுக்கொண்டதாகவும் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
அஜித் குறித்து பிருத்விராஜ் புகழ்ந்து பேசிய இந்த வீடியோவை, ஏகே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்ளாமல் பப்ளிசிட்டியை விரும்பாத அஜித், சினிமா நட்சத்திரங்களுக்கே ரோல் மாடலாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











