தந்தையின் அஸ்தியை ECR-ல் கரைத்தோம்... அஜித்தின் அண்ணன் அனில் குமார் உருக்கமாக ட்வீட்!
சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இரு தினங்களுக்கு முன்னர் தனது 84வது வயதில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்ட் நகர் மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
தந்தையின் மறைவால் சோகத்தில் இருந்த அஜித்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் ஏராளமான திரை பிரபலங்கள் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தங்களது தந்தையின் அஸ்தியை ECR கடற்கரையில் கரைத்துவிட்டதாக அஜித்தின் அண்ணன் ட்வீட் செய்துள்ளார்.

அஜித் தந்தை மறைவு
நடிகர் அஜித் குமாரின் அப்பா சுப்ரமணியன் கடந்த 24ம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாத நோய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அப்பாவை தனது வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டார் அஜித். 84 வயதான சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே மினி ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட சுப்ரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ECR-ல் அஸ்தி கரைக்கப்பட்டது
போலீஸார் பாதுகாப்புடன் நடந்த இந்த இறுதி நிகழ்ச்சிகளில் அஜித், ஷாலினி, அஜித்தின் சகோதரர்கள் ஆகியோருடன் அம்மாவும் கலந்துகொண்டார். இறுதியாக தனது கணவரின் முகத்தைப் பார்த்த அஜித்தின் அம்மா, துயரம் தாங்காமல் கதறி அழுதார். அப்போது தனது அம்மாவை கட்டியணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார் அஜித். இந்நிலையில், தந்தையின் அஸ்தி சென்னை ECR கடற்கரையில் கரைக்கப்பட்டதாக அஜித்தின் அண்ணன் அனில் குமார் ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் அக்கறைக்கு நன்றி
அந்த டிவிட்டர் பதிவில், சிலர் காசிக்குச் செல்கிறார்கள்; இன்னும் சிலர் அருகிலுள்ள கரைக்கு சென்று அஸ்தியை கரைப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், 3 தலைமுறை இணைந்து எங்கள் தந்தைக்கு காரியம் செய்தோம் எனக் கூறியுள்ளார். எங்கள் மீது அக்கறை எடுத்து ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், ECR-ல் அஸ்தி கரைக்கப்பட்ட லொக்கேஷனையும் அந்த டிவிட்டர் பதிவில் ஷேர் செய்துள்ளார்.

மீண்டு வருவார் அஜித்
தங்களது தந்தை உயிரிழந்தது குடும்ப நிகழ்வாகவே இருக்க நினைக்கிறோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார் அஜித். அதனை புரிந்துகொண்ட அஜித் ரசிகர்கள் அவரது வீட்டிற்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த சுப்ரமணியன் தனது மகன்களான அஜித் உட்பட மூவரையும் நண்பர்களைப் போல வளர்த்தவர். அதேபோல், அவர்களது அம்மாவும் மூன்று பேரையும் அரவணைத்துச் சென்றவர். இந்நிலையில், அப்பாவை இழந்த துயரத்தில் இருக்கும் அஜித் விரைவில் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

விஜய் நேரில் ஆறுதல்
அஜித் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நடிகர்கள் கமல், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். முக்கியமாக நடிகர் விஜய் அஜித் வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இது பப்ளிசிட்டியாக இருக்கக் கூடாது என புகைப்படங்கள் வெளியாகாதவாறு பார்த்துக்கொண்டார் விஜய். அஜித்தும் விஜய்யும் எப்போதுமே நல்ல நண்பர்களாகவே உள்ளனர் என்பதற்கு இந்நிகழ்வே உதாரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











