மங்காத்தாவுக்கு பிறகு நிகழ்ந்த விஜய் - அஜித் சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்?.. ரசிகர்கள் சோகம்
சென்னை: அஜித்தின் தந்தை உயிரிழந்ததால் நடிகர் விஜய் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தார். ஆனால் இருவரது சந்திப்பு இப்படியா அமைய வேண்டும் என ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் அஜித்தும், விஜய்யும் அடக்கம். ரஜினி - கமல் சகாப்தம் எப்படியோ அதுபோல் அஜித் - விஜய் சகாப்தம் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. பல இளம் நடிகர்களுக்கும் அஜித்தும், விஜய்யும் ரோல் மாடலாக இருக்கின்றனர்.

ஒரே காலகட்டத்தில் எண்ட்ரி ஆன அஜித், விஜய்
அஜித்தும், விஜய்யும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள். இருவருமே ஆரம்பத்தில் தடுமாறி பிறகு போராடி தனது திறமையின் துணையோடு தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள். 90களில் நடிக்க வந்த இவர்கள் 90களின் இறுதியிலும், 2000த்தின் ஆரம்பத்திலும் தங்களது சாம்ராஜ்யத்தை வலுவாக்கினர். இதனால் இரண்டு பேருக்குமான போட்டி அப்போதிருந்து ஆரம்பித்தது. ஒரு பக்கம் விஜய் இளைய தளபதி என அழைக்கப்பட, அஜித் தல என அழைக்கப்பட்டார்.

இருவருக்கும் உச்சமடைந்த போட்டி
இருவருக்கும் ரசிகர்கள் பெருகிவிட இரண்டு பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது மோதலும் அதிகரித்தது. ஆனால் அதையெல்லாம் அஜித்தோ, விஜய்யோ கண்டுகொள்ளாமல்தான் இருந்தனர். ஒருகட்டத்தில் அஜித் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டார். நிலைமை இப்படி இருக்க அஜித்தும், விஜய்யும் விழாக்களில் சந்தித்துக்கொண்டாலே பெரும் செய்தியாக மாறிய காலமும் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள் என இருவருடனும் பழகியவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

உறுதிப்படுத்திய அஜித் - விஜய் சந்திப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடிக்க அஜித்தும்; ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்க விஜய்யும் கமிட்டானார்கள். அந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்டூடியோவில் நடந்தது. இந்தத் தகவல் அஜித், விஜய் இரண்டு பேருக்கும் தெரியவர உடனடியாக இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது அஜித்திற்கு விஜய் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். அதேபோல் அஜித் அவரே பிரியாணி சமைத்து போட்டார். இதனால் இருவரும் சிறந்த நண்பர்கள்தான் என்பது உறுதியானது.

சந்தித்துக்கொள்ளாத அஜித் - விஜய்
இந்த சந்திப்பு கடந்த 2011ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு இரண்டு பேரும் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆனால் அஜித் நடித்த வீரம் படமும், விஜய் நடித்த ஜில்லா படமும், சமீபத்தில் துணிவும், வாரிசும் ஒன்றாக களமிறங்கின. நிலைமை இப்படி இருக்க இன்று அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து அஜித்திற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் - விஜய் சந்திப்பு
இந்நிலையில் நடிகர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திரையில் போட்டியாளர்களாக கருதப்பட்டாலும் இருவரும் உண்மையில் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள் என பேச ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் யார் நம்பர் 1 என தயாரிப்பாளர் பற்ற வைத்த சூழலில் அஜித்தை நேரில் சந்தித்து தந்தை இழப்பிறகு ஆறுதல் கூறிய விஜய்யின் செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே நீண்ட வருடங்களுக்கு பிறகு ஏகேவும், தளபதியும் சந்தித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்த சந்திப்பு இப்படி ஒரு சோக நிகழ்வுக்காக அமைந்துவிட்டதே என அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகத்துடன் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











