ஆம்னி வேனில் அஜித் தந்தை இறுதி ஊர்வலம்.. உச்சக்கட்ட சோகத்துடன் உடலை சுமந்து சென்ற அஜித்
சென்னை: இன்று காலை உயிரிழந்த அஜித்தின் தந்தை உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உச்சக்கட்ட சோகத்துடன் அஜித் தனது தந்தை உடலை சுமந்து சென்றார்.
துணிவு படத்துக்கு பிறகு அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

அஜித் தந்தை மரணம்
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம். 84 வயதான அவர் கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் இன்று காலை அஜித்தின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு முதலமைச்சர் முதல் அஜித்தின் ரசிகர்கள்வரை இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
இன்று காலை சுப்ரமணியம் உயிரிழந்ததை அடுத்து அஜித் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் இறுதிச்சடங்கை கவனிக்க ஆரம்பித்தனர். சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் உடலானது பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வீட்டிலிருந்து மின் மயானத்துக்கு ஆம்னி வேனில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு மின் மயானத்தின் வாசலில் இருந்து அவரின் உடலை அஜித்குமார் சோகத்துடன் சுமந்து சென்றார். அவர் மட்டுமின்றி ஷாலினி, ஷாமிலி, அஜித்தின் சகோதரர்கள், குடும்பத்தினர் மின் மயானத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அஜித் தந்தை உயிரிழப்பு; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
தங்களது தந்தையின் இறுதிச்சடங்கானது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருக்கும் என அஜித்தும் அவரது சகோதரர்களும் அறிவித்ததை அடுத்து காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன்படி வீட்டிலும், பெசன்ட் நகர் மின்மயானத்திலும் அஜித் பெயரை சொல்லி வெளி நபர்கள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

அஜித்குமார் வைத்த கோரிக்கை
முன்னதாக தந்தை உயிரிழந்தவுடன் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்துவந்தோம். எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம். மேலும் எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தார்.
கவலையில் உள்ள இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசி வாயிலாகவும், குறுந்தகவல் வாயிலாகவும் விசாரிக்கிறீர்கள். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலவில்லை. அதை இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எனவே ஒத்துழைப்பு கொடுங்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











