Ajith: "நான் அப்படி பண்ணிருக்க மாட்டேன்... ஆனா அஜித் செஞ்சார்..” கண்கலங்கிய எஸ்ஜே சூர்யா!!
சென்னை: வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா.
குஷி, நியூ, அ..ஆ, இசை போன்ற படங்களை இயக்கிய அவர், தற்போது நடிப்பில் ரொம்பவே பிஸியாகிவிட்டார்.
வாலி படத்தில் எஸ்ஜே சூர்யாவை இயக்குநராக அறிமுகப்படுத்தியது அஜித் தான்.
இந்நிலையில், அஜித் தனக்கு வாய்ப்புக் கொடுத்தது குறித்து எஸ்ஜே சூர்யா நெகிழ்ச்சியாக பேசியது வைரலாகி வருகிறது.

அஜித்தை நினைத்து கண்கலங்கிய எஸ்ஜே சூர்யா: அஜித் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அஜித்துடன் சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கியிருந்தார். வாலி தான் எஸ்ஜே சூர்யாவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாலி கொடுத்த ஹிட்டால் அடுத்து விஜய்யின் குஷி படத்தை இயக்கினார் எஸ்ஜே சூர்யா.
தொடர்ந்து நியூ, அ..ஆ, இசை போன்ற படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய எஸ்ஜே சூர்யா, தற்போது கோலிவுட், டோலிவுட்டில் வெரைட்டியான நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இறைவியில் இருந்து தொடங்கிய எஸ்ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு, இப்போது மாநாடு, மார்க் ஆண்டனி வரை மாஸ் காட்டுகிறது.
இந்நிலையில், தனது முதல் படமான வாலி குறித்து நினைவுகளை பகிர்ந்த எஸ்ஜே சூர்யா, அதில் ஹீரோவாக நடித்த அஜித் பற்றி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தை இயக்கிய போது எஸ்ஜே சூர்யாவுக்கு கார் அன்பளிப்பாக கொடுத்து அசத்தியவர் அஜித். ஆனால், வாலி ஷூட்டிங் தொடங்கும் முன்னர் எஸ்ஜே சூர்யா ரொம்பவே மோசமான காஸ்ட்யூமில் இருந்துள்ளார்.

பட்டன் இல்லாத சட்டை, தைத்து போடப்பட்ட செருப்பு என பார்க்க எப்படியோ இருப்பாராம் எஸ்ஜே சூர்யா. ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாக பார்க்காத அஜித், எல்லோரது முன்னிலையிலும் எஸ்ஜே சூர்யாவின் தோளில் கையை போட்டு, "இவருதான் என்னோட அடுத்த படத்துக்கு டைரக்டர், என்னோட டைரக்டர்" என அறிமுகப்படுத்தி வைப்பாராம். இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த எஸ்ஜே சூர்யா, நானாக இருந்திருந்தால் அஜித் சார் மாதிரி பெருந்தன்மையாக நடந்திருப்பேனா எனத் தெரியவில்லை.
அஜித் சார் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. அவர் தான் என்னோட வாழ்வில் விளக்கு ஏற்றி வைத்தவர். ஆசை படத்தின் போதே அவர் எனக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். அப்படி அவர் கொடுத்த வாழ்வு தான் இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என எஸ்ஜே சூர்யா கண்கலங்கியபடி பேசியுள்ளார். எஸ்ஜே சூர்யாவின் த்ரோபேக் பேட்டியில் இருந்த இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











