Ajith: கார் ரேஸில் களமிறங்கியது விளம்பரத்துக்கு இல்லை.. அஜித்குமார் க்ளியர் ஸ்டேட்மெண்ட்!
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் ரசிகரளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், கார் ரேஸில் தான் கலந்து கொண்டிருப்பது என்பது விருதுக்காகவோ, தலைப்புச் செய்திகளில் இடம் பெறவேண்டும் என்பதற்காகவோ அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது அறிக்கையில் கார் ரேஸ் குறித்து அவர் கூறுகையில், " சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை. மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது. அதற்கு தேவை Respect, Focus & Grit! அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல.
அதற்கு மட்டும்: ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். 'அஜித்குமார் மோட்டார் ரேசிங்' என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன்.

குடும்பத்தினர்: என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார் என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்வி இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள் சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ். மணி மற்றும் என் அம்மா மோகினி மணி என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி
அன்புக்கு உண்மை: நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை. என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.

வெற்றிகள்: உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். வாழு வாழ விடு! அஜித்குமார்" என்று குறிப்பிட்டுள்ளார். கார் ரேஸ் குறித்து அஜித் இவ்வாறு தெரிவித்துள்ளதும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐரோப்பிய கார் ரேஸில் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸ் அணி இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும் வென்று அசத்தியது.


Click it and Unblock the Notifications











