GBU Box Office: தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிகள்.. பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் அஜித்குமார்
சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் தான் தற்போது மொத்த தமிழ் சினிமாவிலும் பேச்சாக உள்ளது. சிலர் படத்தில் என்ன கதை இருக்கு? திரைக்கதை என படத்தில் எதுவும் இல்லை. அஜித்தை வைத்து படம் எடுக்கச் சொன்னால் 40 முதல் 50 ரீல்ஸ்களை எடுத்து அவற்றை இணைத்து வைத்துள்ளார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம், தரமான ஃபேன் பாய் சம்பவம், அஜித்தின் மாஸான கம்பேக் படம் இதுதான் என சொல்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் இசைஞானி இளையராஜா தனது பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டார்கள் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குட் பேட் அக்லி குறித்த பேச்சை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அஜித்தின் 63 வது படமான இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 30.9 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்தது. அதாவது இதுவரை வெளியான அஜித் படங்களில் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக இந்த படம் மாறியது.
வசூல்: இப்படியான நிலையில், படம் முதல் 5 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் கிராஸ் கலெக்ஷன் கொடுத்துள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் குட் பேட் அக்லி படம் குறித்து பேசியவர் என்றால் அது, ஜி.வி. பிரகாஷ் குமார் தான். அதேபோல் படம் ரிலீஸ்க்குப் பின்னரும் படம் குறித்த ஒவ்வொரு தகவலையும் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

ஜி.வி: அந்த வகையில் குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் 5 நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்துள்ளது. மேலும் அஜித்துடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் குட் பேட் அக்லி. இவர் இதற்கு முன்னர் அஜித்தின் கிரீடம் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன் பின்னர் குட் பேட் அக்லி படத்திற்குத்தான் இசையமைத்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைப்பாளர் என கூறப்படுகிறது.

500 கோடிகள்: குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டில் வெளியாகும் அஜித்தின் இரண்டாவது படம் ஆகும். இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரெக்கார்ட் படைக்கும் என சிலர் கூறி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், படம் ரூபாய் 500 கோடிகள் வசூல் செய்யும் என கூறிவருகிறார்கள். அப்படி இந்த படம் ரூபாய் 500 கோடிகள் வசூல் செய்தால் அது அஜித்தின் அதிகபட்ச வசூலாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











