Aadhik Ravichandran: தரையில் அமர்ந்து குட் பேட் அக்லி படம் பார்த்த ஆதிக்.. இந்த அளவுக்கு தல வெறியரா?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படமான குட் பேட் அக்லி படம் இன்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் அஜித் குமார் உடன் த்ரிஷா, சிம்ரன், பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தரையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
குட் பேட் அக்லி படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்து வருகிறார்கள். முதல் பாதியில் படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் படம் மொத்தமும் அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே, அதாவது கடந்த 10 ஆண்டுகளாக மாஸான படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அதிலும் இவர் கடைசியாக கேங்ஸ்டராக நடித்த படம் பில்லா 2. இந்த படத்திற்கு பின்னர் வெளியான படங்களில் சிலவற்றில் ரவுடியாக இருந்து, திருந்தி வாழும் கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார். ஆனால் குட் பேட் அக்லி படத்தில் முழுக்க முழுக்க கேங்ஸ்டராக நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

வெறித்தனமான ரசிகர்: படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என பலமுறை கூறியுள்ளார். மேலும் அஜித் படங்களுக்கு போஸ்டர் ஒட்டி உள்ளதாகவும், கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து, அஜித்தைப் பார்த்து பார்த்து வளர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் குட் பேட் அக்லி படத்தை முழுக்க முழுக்க ஃபேன் பாய் சம்பவமாக தான் எடுத்துள்ளேன் என தெரிவித்தார். படத்தில் ஓ.ஜி. சம்பவம் என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார். மேலும் படத்தின் டீசர் ரிலீஸின்போது தியேட்டருக்கு வந்து தல தரிசனம் செய்தார்.

ஆதிக்: டீசர் டிரைலர் என இரண்டிலும் மிரட்டி விட்டதால், ரசிகர்களுக்கு ஆதிக் மீது தனி மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. படத்தின் டீசர் ரிலீஸ் நாளுக்கே மதுரை அஜித் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மூன்று பவுன் தங்க மோதிரம் எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தார்கள். இப்படியான நிலையில் படம் இன்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்களுக்கு லவ் யூக்களைச் சொல்லி வருகிறார்கள். சில ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முத்தங்கள் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

தரையில் அமர்ந்து: ஆதிக் படம் பார்க்க சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார். படம் பார்க்க வந்த அவர், தரையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஆதிக் தரையில் அமர்ந்து படம் பார்த்ததைப் பார்த்த ரசிகர் ஒருவர் அதனை தனது மொபைலில் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் படத்தின் இயக்குநர் தரையில் அமர்ந்து படம் பார்க்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகராக, தலையின் வெறியராக இருந்திருப்பார் என பேசி வருகிறார்கள். மேலும் தரையில் அமர்ந்து ஆதிக் படம் பார்த்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











