Ajith: ஒரே நேரத்தில் அனிருத்துடன்.. அஜித்தை சந்தித்த நான்கு இயக்குநர்கள்.. விஷயம் இதுதானா?
சென்னை: அஜித் தற்போது தனது அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் இந்த கார் ரேஸில் அஜித் குமார் தனது சொந்த செலவில் ஒரு அணியை உருவாக்கி, அதனை களமிறக்கி வெற்றிகளும் குவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி அஜித் குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வரும் அக்டோபர் மாதத்துடன் அஜித் தற்போது கலந்து கொண்டுள்ள கார் பந்தய மானது முடிவுறப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திலேயே அஜித்குமார் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி அஜித் திரைவாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து, அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இது மட்டும் இல்லாமல், நேற்று உலக நண்பர்கள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று அஜித் குமாரை இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.ஆர். முருகதாஸ், சிறுத்தை சிவா மற்றும் மனு ஆனந்த் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார்கள். மேலும் இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் அனிருத் உடன் இருந்தார். அதேபோல் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் உடன் இருந்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட சுரேஷ் சந்திரா அதற்கு, " நேற்று, இன்று, நாளை என நண்பர்களை ஒரு காலத்தின் கீழ் அடக்கிவிட முடியாது. நண்பர்கள் தின வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
அனிருத் தான்: குறிப்பாக பல ரசிகர்களும் இணையவாசிகளும், அஜித்தின் அடுத்தடுத்த லைன் - அப்கள் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும் போலயே என்று பேசி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், அவரது அடுத்த படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர் போலயே எனவும் பேசத் தொடங்கி விட்டார்கள்.
அஜித் அறிக்கை: நடிப்பு, கார் ரேஸ் என செம பிஸியாக உள்ள அஜித் குமார் நேற்று தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில், " சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

ரசிகர்களின் அன்பு: நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான். நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன். சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள். பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி! பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











