Ajithkumar: நீ சிங்கம் தான்.. கார் ரேஸில் மூன்றாவது இடத்தை வென்று விட்டு.. அஜித் செய்ததைப் பாருங்க!
இத்தாலி: நடிகர் அஜித் குமார் தனது பெயரில் அஜித் குமார் ரேசிங் என்ற பெயரில் கார் ரேஸ் அணியைக் கட்டமைத்து, 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த கார் ரேஸ் பந்தயமானது, வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது. இப்படியான நிலையில், அஜித் குமார் அணி நேற்று அதாவது, மார்ச் 23ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை வென்று அசத்தியுள்ளது. அப்போது அஜித் குமார் செய்த பல விஷயங்கள் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் குமாருக்கு கார் ரேஸில் ஈடுபாடு உள்ளது என்பது, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது தனது பெயரில் தொடங்கியுள்ள கார் ரேஸ் குழுவின் கேப்டனாக செயல்படும் அஜித் குமார் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.ஏற்கனவே துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. துபாயில் அவரைப் பார்க்கவும் அவரது அணியை ஆதரிக்கவும் ரசிகர்கள் திரண்டனர். தனது ரசிகர்கள் மீது தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் என்றுதான் கூறவேண்டும்.
அஜித், தான் கார் ரேஸில் முழுவதுமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் கமிட் ஆன இரண்டு படங்களிலும் அவரது அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, கடந்த ஆண்டு இறுதியில் கார் ரேஸில் களமிறங்கினார். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

விபத்து: இதில் பயிற்சியின்போது ஏற்பட்ட கோர விபத்து, அதன் பின்னர், கார் ரேஸில் ஏற்பட்ட விபத்து என அனைத்தும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் இந்த விபத்துகளில் அஜித்திற்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படாததால், ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அஜித் மற்றும் அவரது கார் ரேஸ் அணியில் உள்ள வீரர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என, வேண்டிக் கொண்ட ரசிகர்களும் உள்ளார்கள்.
மூன்றாவது இடம்: இப்படியான நிலையில் அஜித் குமார் ரேசிங் அணி, நேற்று அதாவது மார்ச் 23ஆம் தேதி இத்தாலியில் உள்ள முகெல்லோ 12H ரேஸில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடத்தை வென்று அசத்தியுள்ளது. அஜித்குமாருக்கு இத்தாலியில் உள்ள அவரது ரசிகர்கள் ரேஸ் நடக்கும் இடத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தார்கள். கார் ரேஸில் மூன்றாவது இடத்தை வென்ற பின்னர், தனது குழுவினருடன் இணைந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது தேசிய கொடியுடன் இருந்த அஜித்குமாரை அவரது அணியைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர்கள் மட்டும் இல்லாமல், இரண்டாவது இடம் பிடித்த கார் ரேஸ் வீரர்களும் இணைந்து ஷேம்பைனால் குளிப்பாட்டிவிட்டார்கள்.

ரசிகர்கள்: அதன் பின்னர் தன்னைப் பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் அஜித் குமார், தனது அணி வென்ற மூன்றாம் இடத்திற்கான கோப்பையை எடுத்துக் கொண்டு போய்க் காட்டினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்திற்கு சென்றனர் எனலாம். அதன் பின்னர் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், அஜித்தை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











