Ajithkumar: பாசமுள்ள மனிதனப்பா.. அஜித்குமாரின் பொங்கல் வாழ்த்து.. இதுலையும் தனி வழிதான்!
சென்னை: 2025ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் அஜித்குமார் குறித்த பேச்சுகளும் செய்திகளும்தான் அதிகம். பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்ட விடாமுயற்சி படம், புத்தாண்டு வாழ்த்தோடு ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும், அடுத்த 10 தினங்களில் மொத்தமும் மாறிவிட்டது. இப்போது கேட்டால், விடாமுயற்சி ரிலீஸ் ஆகாததே ஒருவகையில் திருப்திதான் என அஜித் ரசிகர்கள் சொல்லக் கூடும். காரணம், ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக, துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை வென்று கொடுத்துள்ளார் அஜித். இப்படியான நிலையில் அஜித்குமார் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியோடு, விடாமுயற்சி ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு, கார் ரேஸுக்கு வெகு சில நாட்களுக்கு முன்னர், அஜித் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தபோது அவரது கார் பெரும் கோர விபத்தினைச் சந்தித்தது. இது தொடர்பான வீடியோவை இப்போது யோசித்துப்பார்த்தாலும், பயம் தான். விபத்தில் அஜித்துக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அதன் பின்னர் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்தது. மேலும் அவரது அணிக்கும் அவருக்கும் ஆதரவு அளிக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கார் ரேஸ் நடக்கும் மைதானத்தில் திரண்டனர். இவர்களைப் பார்த்த அஜித்குமார், தான் அவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக தெரிவித்தார். போட்டியில் மூன்றாவது இடத்தினை வென்ற பின்னர், ரசிகர்களை நோக்கி தேசியக் கொடியுடன் ஓடிவந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அறிவுரை: போட்டிக்கு மத்தியில் அஜித்குமார் வெளியிட்ட வீடியோவில் தனது ரசிகர்களை அவரவர் இலக்கினை நோக்கி பயணிக்கச் சொன்னார். அதேபோல் சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்கள் எத்தனை நாட்களுக்குத்தான் அஜித் வாழ்க, விஜய் வாழ்கனு சொல்லீட்டு இருப்பீங்க? நீங்க எப்போ வாழப்போறீங்க? எனக் கேள்வி எழுப்பினார். இப்படியான நிலையில், தனது ரசிகர்களுக்கு நன்றியும் பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

பொங்கல்: " அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

வாழ்த்து: இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











