Vidaamuyarchi Fans Review: அஜித்தை கொண்டாடுறாங்க.. மகிழ்திருமேனியை திட்டுறாங்க! ரசிகர்கள் ரியாக்ஷன்
சென்னை: அஜித் குமார் , த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் குமார், அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பினைப் பாராட்டுகிறார்கள். மேலும், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவையும், அனிருத்தின் பின்னணி இசையையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் மகிழ் திருமேனியின் இயக்கம் குறித்து கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

படம் பார்த்த ரசிகர், " இயக்குநர் மகிழ் திருமேனி தான் கூறியதை போலவே தரமான படத்தையும் வித்தியாசமான அஜித்தையும் காட்டியுள்ளார். படம் முழுவதும் அஜித்தைப் பார்க்க பார்க்க ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதற்கு முன்னர் வந்த அஜித் படங்கள் மாஸான தமிழ் படங்களைப் போல் இருந்தது. ஆனால் இந்தப் படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது. அனிருத் பின்னணி இசையில் மிரட்டி விட்டுள்ளார். படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

திரைக்கதை: மற்றொரு ரசிகர் கூறும்போது, " பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் படத்தினை பிரேக் டவுன் படத்தை விட தரமாக கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக உள்ளது. ஆனால், ஸ்லோவாக செல்கிறது. இடைவேளை காட்சி எல்லாம் வேற லெவலில் இருந்தது. படத்தின் திரைக்கதை மட்டும் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியிருக்கும். அஜித் ரசிகர்கள் அஜித்துக்காக இந்தப் படத்தைப் பார்ப்பார்கள். ஆனால் மற்ற ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் குடும்பத்தோடு பார்க்க நல்ல படம்" என கூறியுள்ளார்.

சொதப்பல்: "அஜித் படம் என்றாலே பக்காவான மாஸ் சீன்கள் இருக்கும் என நினைத்து படத்திற்கு வந்தேன். ஆனால், படத்தில் ஒரு மாஸ் சீன் கூட இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் படம். அஜித்திற்கு மாஸான என்ட்ரி சீனாவாது வைத்திருக்கலாம். ஆனால் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை. அஜித் நன்றாக நடித்துள்ளார். ஆனால் மகிழ் திருமேனி சொதப்பிவிட்டார். அவரது படங்களும் எனக்கு பிடிக்கும். அவரது முந்தைய படம், ஓரளவிற்காவது பார்க்கும்படி இருந்தது. ஆனால், இந்தப் படத்தை அந்த வரிசையில் கூட வைக்க முடியாது" என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
தரம்: "விடாமுயற்சி படத்தை பொறுத்தவரையில் குடும்பத்துடன் பார்க்கலாம். படத்தில் இந்த தலைமுறைக்கும் சேர்த்து சிறப்பான மெசேஜ் சொல்லப்பட்டுள்ளது. மலையாளப் படங்கள் தரமாக இருக்கிறது எனக் கூறுகின்றோம், காரணம் படத்தின் கதை மற்றும் திரைக்கதைதான். அதேபோல் இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை மிகச் சிறப்பாக உள்ளது. தரமான த்ரில்லர் படமாக விடாமுயற்சி உள்ளது. பொறுமையாக பார்த்தால் தரமான படம் என்பது புரியும்" என ஒரு ரசிகர் கூறியுள்ளார். ரசிகர்களின் கலவையான விமர்சனங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











