அஜித்தின் விடாமுயற்சி.. கைவிட்ட பாக்ஸ் ஆஃபிஸ்?.. மூன்றாவது நாள் வசூல் இவ்வளவுதானா?.. ரசிகர்கள் அப்செட்
சென்னை: பிரேக் டவுன் படத்தை தழுவி மகிழ் திருமேனி உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது கவலையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை.
மகிழ் திருமேனியும் அஜித்தும் இணைந்த திரைப்படம் விடாமுயற்சி. அஜித்தை மகிழ் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து கண்டிப்பாக தடம், தடையற தாக்க, மீகாமன் போன்று தரமான கதையை படமாக்குவார் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அஜித்தோ வேறு பிளான் வைத்திருந்தார். அதாவது ஆங்கில படமான பிரேக் டவுன் படத்தை தழுவி இந்தப் படத்தை இயக்கலாம் என்று ஐடியா சொன்னதால்; வேறு வழியின்றி அதற்கு மகிழ் திருமேனியும் ஒத்துக்கொண்டார்.

ரிலீஸான படம்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தன. ஆனால் அத்தனையையும் மீறி படத்தின் ஷூட்டிங்கை முடித்தார் இயக்குநர்.பிறகு ஒருவழியாக கடந்த ஆறாம் தேதி வெளியானது படம். பெரிய எதிர்பார்ப்போடு படத்துக்கு வராதீர்கள் என்று இயக்குநர் முன்னமே சொல்லிவிட்டாலும்; இரண்டு வருடங்கள் கழித்து அஜித் படம் வருவதால் நல்ல ஆர்வத்தோடு தியேட்டர்களுக்கு படையெடுத்து திருவிழா கோலம் போல் காட்சியளிக்க வைத்தார்கள் ஏகே ரசிகர்கள்.
கலவையான விமர்சனம்: ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி படம் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தரமான ஆக்ஷன் படம் இல்லை திரில்லர் படத்தை எதிர்பார்த்து போயிருந்தவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி இருந்தது. சாதாரண ஒன் லைன், சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதை, தேவையில்லாத பிளாஷ்பேக், அஜித்துக்கான மாஸ் சீன்கள் அதிகம் இல்லாதது, சுமாரான மேக்கிங் என விடாமுயற்சி ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து பார்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எதற்காக அஜித்?: பொதுவான ரசிகர்கள் விடாமுயற்சியை கழுவி ஊற்றினாலும்; அஜித்தின் ரசிகர்கள் கண்டிப்பாக விட்டுத்தரமாட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் தங்களுக்கு படம் திருப்தி கொடுக்காததால் அவர்களும் விடாமுயற்சியை வீண் முயற்சி என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் அனிருத்தின் இசையும், காருக்குள் வரும் ஒரு ஃபைட் சீன் மட்டும்தான் படத்தில் தேறும் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டார்கள்.
வசூல் எவ்வளவு?: இப்படி விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக கெத்து காண்பிக்கும் என்றுதான் ஏகே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அந்த ஏரியாவிலும் படம் அடி வாங்கியிருக்கிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் வசூல் செய்த 22 கோடி ரூபாயையும் சேர்த்து இந்திய அளவில் 23 கோடியே 50 லட்சம் மட்டும்தான் வசூலித்தது. இரண்டாவது நாளோ தமிழ்நாட்டில் வசூல் செய்த 9.85 கோடி ரூபாயையும் சேர்த்து இந்திய அளவில் மொத்தமாக பத்து கோடி ரூபாயாக வசூல் குறைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வசூலானது இன்னமும் குறைந்து தமிழ்நாட்டில் மொத்தமே ஏழு கோடி ரூபாய்வரைதான் வசூலித்தது என்றும்; இதுவரை படம் வெளியாகி மூன்று நாட்களில் விடாமுயற்சி இந்திய அளவில் 40லிருந்து 42 கோடி ரூபாய் வரைதான் வசூலித்திருக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் ஏகே ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications