அஜித்தின் குட் பேட் அக்லி வசூல் வேட்டை .. ஆத்தாடி மூன்று நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியானாலும் அஜித் ரசிகர்களிடம் மட்டும்தான் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. மற்றவர்களிடம் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. முக்கியமாக படத்தில் கதை என்று புதிதாக ஒன்றுமே இல்லை என அவர்கள் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் படம் ரிலீஸாகி மூன்றாவது நாளான நேற்றைய வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித்குமார். இளம் இயக்குநருடன் அஜித்குமார் இணைந்திருந்ததால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதுமட்டுமின்றி ஆதிக்கும் வெறித்தனமான அஜித் ரசிகர் என்பதால் கண்டிப்பாக ஃபேன் பாய் சம்பவமாகத்தான் இருக்கும் என்று பலரும் எண்ணினார்கள். இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் என பலர் நடித்திருந்தார்கள்.
கலவையான விமர்சனம்: படமானது கடந்த பத்தாம் தேதி வெளியானது. மிகப்பெரிய ஆவலோடு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது. முழுக்க முழுக்க ஃபேன் பாய் சம்பவமாகவே ஆதிக் செய்திருந்தார். இதன் காரணமாக விடாமுயற்சியில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்துவிட்டோம் என ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். அதேசமயம் மற்றவர்களுக்கு படத்தின் மீது பெரிய அபிப்ராயம் இல்லை. அவர்கள் இந்தப் படத்தை சுமாருக்கும் கீழ்தான் என்ற நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்.

படத்தில் என்ன பிரச்னை?: படத்தில் கதையும், திரைக்கதையும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. முக்கியமாக அரத பழசான கதையையும், திரைக்கதையையும் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபரன்ஸைகளை வைத்து ஒப்பேத்த பார்த்திருக்கிறார் என்று ஓபனாகவே ரசிகர்கள் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு படத்துக்கு கதையும், திரைக்கதையும்தான் முக்கியமே தவிர்த்து ஹீரோவின் புகழ் பாடும் வசனங்களோ, அவரது பழைய படங்களின் நினைவூட்டல்களோ தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.
ரெட்ரோ பாடல் கொடுமை: அதேபோல் தியாகராஜன் குமாரராஜா, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சூப்பர் டீலக்ஸ், கைதி ஆகிய படங்களில் கதையை துருத்தாமல் ரெட்ரோ பாடல்களை வைத்தார்கள். லியோவிலேயே அந்தப் பாடல் துருத்திக்கொண்டுதான் இருக்கும். இப்படிப்பட்ட நிலைமையில் குட் பேட் அக்லியில் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பந்தமே இல்லாமல் அத்தனை பழைய பாடல்களை வைத்திருக்கிறார் என்று விமர்சிக்கிறார்கள். விமர்சன ரீதியாக இந்தப் படம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுவதாகவே தெரிகிறது.
மூன்றாவது நாள் வசூல்: இந்நிலையில் படங்களின் வசூல் தகவல்களை கொண்டிருக்கும் Sacnilk வலைதளம் குட் பேட் அக்லியின் மூன்றாவது நாள் வசூல் நிலவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்படி மூன்றாவது நாளான நேற்று படமானது 18.50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறதாம். இதுவரை அந்தப் படம் 70 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அந்த வலைதளம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக வசூல் குறித்த அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.


Click it and Unblock the Notifications











