அஜித்தின் குட் பேட் அக்லி.. வெளியானது தரமான HD ப்ரிண்ட்.. சண்டை செய்ய தயாரிப்பாளர் அழைப்பு
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் இந்தப் படம் பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில் படத்தின் HD ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகியிருப்பது பெரிய அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.
மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தால்; கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க; மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது.
நேற்று ரிலீஸான படம்: படமானது முதலில் பொங்கலுக்கு வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று படம் ரிலீஸானது. தமிழ்நாட்டில் சிறப்பு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை. எனவே காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள். அஜித்தின் மனைவி ஷாலினியும் தனது மகள் அனௌஷ்காவுடன் சென்னையில் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்.

பாசிட்டிவ் விமர்சனம்: ஆதிக் அடிப்படையில் அஜித்குமாரின் ரசிகர். இந்தப் படம் முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என்று படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரிலேயே உணர்த்திவிட்டார். எனவே படத்தில் கூஸ் பம்ப்ஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று பலரும் நினைத்தார்கள். அதன்படிதான் ஏகே ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஆதிக். படத்தின் டைட்டில் கார்டிலிருந்து எண்டு கார்டுவரை ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் என்று அஜித் ரசிகர்கள் ஆதிக்கை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடிவருகிறார்கள்.
இது படம் இல்லை ரீல்ஸ்: அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் ஓரளவுக்குதான் திருப்தியை கொடுத்திருக்கிறது. அஜித்தின் நடிப்பும், அவருக்கான மாஸும் மட்டுமே படத்தில் இருக்கிறது. கதை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதிலும் ரொம்ப ஸ்மார்ட்டாக அஜித்தின் முந்தைய படங்களை ரெஃபரன்ஸாக வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் ஒரு ரீல்ஸைதான் இயக்குநர் கொடுத்திருக்கிறார் என்று விட்டு விளாசிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இன்னொரு தலைவலியாக, படத்தின் HD ப்ரிண்ட் படம் ரிலீஸான முதல் நாளான நேற்றே வெளியாகிவிட்டது.
சுரேஷ் காமாட்சி ட்வீட்: முதல் நாளே நல்ல ப்ரிண்ட் வெளியாகியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "நடக்கும் எதுவும் சினிமாவுக்கு பயனா? பயனற்றதா?! என்ற கேள்வி எல்லா சினிமாக்காரர்களுக்குள்ளும் எழாமல் இல்லை. பிளவு படப் பட இன்னும் வீழ்தலே நிகழும். ஒற்றுமையுடன் உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டிய பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இதோ குட் பேட் அக்லி படத்தோட HD Print வெளியாகிவிட்டது.
திருட்டுகளிடம்தான் சண்டை போட வேண்டும்: நாம் சண்டைபோட வேண்டியது இத்தகைய திருட்டுகளிடம்தான். நாம் உட்கார்ந்து பேச வேண்டியது இதை எப்படி ஒழிப்பது என்பது பற்றித்தான். திரையரங்குகள்..தயாரிப்பாளர்கள் சங்கங்கள், உழைப்பவர்கள் என ஒன்று கூடி நின்று குரல் கொடுக்கவும்.. போராடவும் முன் வரவேண்டியது இதற்குத் தான். தயவுசெய்து இந்த பூனைக்கு மணி கட்டுங்கள். யார் இதைச் செய்வது? என்பதைக் கண்டறிந்து திரையுலகம் செழிக்க பணிபுரியுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











