அஜித்தின் குட் பேட் அக்லி.. இவ்வளவு கலாட்டா செய்றீங்களே.. ரசிகர்களை வைத்து செய்த ஏகே மேனேஜர்
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் திரிஷா, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன், சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தில் மிஸ்ஸானது கண்டிப்பாக இந்தப் படத்தில் கிடைத்துவிடும் என்கிற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருந்த விடாமுயற்சி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் மகிழ் கில்லி என்பதால் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏகே ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் பாத்தில் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்தவிதமான மாஸ் காட்சிகளும் இல்லை. இதன் காரணமாக படத்துக்கு அவர்களது தங்களது முழு வரவேற்பையும் கொடுக்காததால் படம் ஃப்ளாப் ஆனது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். ஏற்கனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் ஆதிக் என்பதாலும் அஜித்தின் தீவிர ரசிகர் அவர் என்பதாலும் இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.மேலும் படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவைகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, சிம்ரன், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் சிம்ரன் நடிக்கிறார் என்பது ட்ரெய்லரை பார்க்கையில்தான் ரசிகர்களுக்கு தெரிந்தது. அது பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது. அதேபோல் சில வின்டேஜ் அஜித் பஞ்ச் டயலாக்குகளையும் ட்ரெய்லரில் இடம்பெற செய்து பட்டையை கிளப்பியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். எனவே இது முழு சம்பவம் செய்யும் படமாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் ரசிகர்களிடம் இருந்தது.

இன்று ரிலீஸான படம்: இப்படி எக்கச்சக்க ஹைப்புகளோடு படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வழக்கம்போல் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சிகள் தொடங்கின. அதேசமயம் பக்கத்து மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்களும் அங்கு சென்று படத்தை பார்த்து தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுக்கிறார்கள். அதேசமயம் முதல் காட்சியில் எப்போதும் இப்படித்தான் ரிசல்ட் வரும் என்பதால் போகப்போகத்தான் படத்தின் ஒரிஜினல் ரிசல்ட் தெரியவரும்.
ட்ரெண்டாகும் சுரேஷ் சந்திரா வீடியோ: இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அவர் இன்று ஒரு திரையரங்குக்கு சென்றார். அப்போது அங்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்துகொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த அவர், "நீங்கள் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் அஜித் ரசிகர் மன்றத்தை தொடர்ந்து நடத்தியிருந்திருக்கலாம். ஆனால் நீங்கள்தான் இல்லாதப்பவே இவ்வளவு கலாட்டா செய்றீங்களே" என்று தெரிவித்தார்.
முன்னதாக மங்காத்தா பட சமயத்தில் சில காரணங்களால் அஜித்குமார் தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அவர் தனது ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகும் அவருக்கு ஓபனிங் நாள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











