துணிவா இல்லை விடாமுயற்சியா?.. முதல் நாள் கலெக்ஷனில் தன்னுடைய படத்திடமே தோற்றுவிட்டாரா அஜித்?
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாகியிருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் வெற்றியை பெறவில்லை. வசூலிலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்தச் சூழலில் அஜித் துணிவு படத்தைவிடவும் விடாமுயற்சி படம் முதல் நாளில் வசூலில் முந்தியதா என்பது குறித்து பார்க்கலாம்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த துணிவு திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித்குமார். முதலில் விக்னேஷ் சிவன் அப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறினார். மகிழ் திருமேனி உள்ளே வந்தார். வந்தவர் சொந்தக் கதையை இயக்குவார் என்று பார்த்தால் விடாமுயற்சி என்கிற பெயரில் பிரேக் டவுன் படத்தை தழுவி எடுப்பதாக கூறப்பட்டது.

நேற்று ரிலீஸ்: படமானது நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வருவதால் அவர் ரசிகர்கள் எல்லாம் உற்சாகத்தில் மிதந்தார்கள். கண்டிப்பாக மிகப்பெரிய படத்தைத்தான் மகிழும், அஜித்தும் சேர்ந்து தங்களுக்கு கொடுக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையிலும் இருந்தார்கள். தியேட்டருக்கு வெளியே ஒரு பண்டிகையை போல் முதல் நாள் முதல் காட்சி செல்வதற்கு முன்பு கொண்டாடி தீர்த்தார்கள் அவர்கள்.
படம் எப்படி இருக்கு?: ஆனால் படம் அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அஜித் - மகிழ் கூட்டணியிடம் எதிர்பார்த்தது எல்லாம் முழுக்க முழுக்க ஒரு மாஸான படத்தைத்தான். ஆனால் இந்தப் படத்தில் அஜித்துக்கான நாயக பிம்பமும், நாயக எழுச்சி தரக்கூடிய விஷயமும் மிஸ்ஸாகியிருந்தது. இதனால் அஜித் ரசிகர்களால் படத்துடன் எளிதாக கனெக்ட் ஆக முடியவில்லை. அதுமட்டுமின்றி திரைக்கதையிலும் ஏகப்பட்ட தட்டையான விஷயங்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டனர்.
வசூலிலும் அடி: படத்துக்கு குடும்பங்களின் ஆதரவு கிடைக்கும் என்று படக்குழுவினர் மனதை தேற்றிக்கொண்டாலும் போகிற போக்கை பார்த்தால் அது நடக்காது என்றே தெரிகிறது. விமர்சன ரீதியாக இப்படி அடி வாங்கியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியிருக்கிறது. முக்கியமாக மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் ஹீரோ அஜித் என்ற பெயரையும் ஆட்டம் காண செய்திருக்கிறது. முதல் நாளில் அந்தப் படம் 22 கோடி ரூபாயைத்தான் தமிழ்நாட்டில் வசூலித்திருக்கிறது.

துணிவிடம் தோல்வி: அஜித்துக்கு போட்டியாளராக கருதப்படும் விஜய் நடித்த GOAT படம் 30 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்தது. அவரிடம் தோற்ற அஜித்; தன்னுடைய முந்தைய படமான துணிவிடமும் தோல்வியடைந்திருக்கிறார். அதாவது துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 24 கோடி ரூபாய் வசூல் செய்தது. விடாமுயற்சியோ இரண்டு கோடி ரூபாய் குறைவாக வசூல் செய்திருக்கிறது. இதனை கவனித்த ஏகே ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என்று ஃபீல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











