எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது.. பட்டையை கிளப்பும் விடாமுயற்சி டீசர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்க மகிழ் திருமேனி படத்தை இயக்கியிருக்கிறார். இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் சம்பாதித்திருக்கும் சூழலில் விடாமுயற்சி படத்தின் டீசர் இப்போது ரிலீஸாகியிருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் ரிலீஸானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசு திரைப்படத்தை காலி செய்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது அடுத்த படத்தில் கமிட்டானார் அஜித். அந்தப் படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் சில விஷயங்கள் ஒத்துவராததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

மகிழ் திருமேனி: இதனையடுத்து கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக மாறிய மகிழ் திருமேனி படத்தை இயக்க உள்ளே வந்தார். இப்போதைய இயக்குநர்களில் மகிழ் தனி தடத்தை பதித்தவர் என்பதாலும்; அவரது மேக்கிங்கில் வித்தியாசம் இருக்கும் என்பதாலும் அஜித்துடன் மகிழ் திருமேனி இணைகிறார் என்பதிலிருந்து இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அஜித்தும், மகிழ் திருமேனியும் இணையும் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜானில் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடந்தது. சில மாதங்கள் அங்கு நடந்த ஷூட்டிங்கோடு விடாமுயற்சி என்ன ஆனது என்றே தெரியவில்லை. மேலும் ஆர்ட் டைரக்டர் மிலன் இறந்தார்; கேமராமேன் நீரவ் ஷாவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ் மாற்றபட்டார். இப்படி படத்தை பற்றி நெகட்டிவ்வாகவே தகவல்கள் வந்துகொண்டிருந்தன.
மீண்டும் அப்டேட்: அதுமட்டுமின்றி அஜித்தும் இடையில் பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் சுற்ற கிளம்பினார். மேலும் லைகாவுக்கு பொருளாதார நெருக்கடி இதன் காரணமாக விடாமுயற்சி படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் கோலிவுட்டில் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை விடாமுயற்சி படத்தை அஜித்தோ, மகிழோ, லைகாவோ கைவிடவில்லை என்று பலரும் கூறினார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் அர்ஜுனும் விடாமுயற்சி ரிலீஸாவது உறுதி என்றும் பேசினார். மேலும் படத்தில் நடித்திருப்பவர்களின் போஸ்டர்களும் ரிலீஸாகின. அதேசமயம் அந்தப் போஸ்டர்கள் ட்ரோலுக்கு உள்ளாகின.
மாஸ் டீஸர்: இந்நிலையில் விடாமுயற்சியின் டீசர் இன்று இரவு ரிலீஸாகும் என்று அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி விடாமுயற்சி டீசர் இன்று ரிலீஸாகியிருக்கிறது. டீசரில் அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் முதலில் தோன்ற பிறகு அஜித்தும்,திரிஷாவும் தோன்றுகிறார்கள். முழுக்க முழுக்க இந்த டீசர் அஜர்பைஜான் பாலைவனத்தில் வைத்து எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து தொகுக்கப்பட்டிருக்கிறது. எந்த வசனமும் இல்லாமல் இந்த டீசர் வந்திருக்கும் சூழலில்; அஜித்தை கண்டு ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் அனிருத்தின் இசை கொஞ்சம் வித்தியாசப்படுவதாகவும் தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











