AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
சென்னை: அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் திருப்தி இல்லை என சொல்லப்படும் நிலையில், நயன்தாரா சமரசம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62ல் அதிரடி திருப்பம்
அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த துணிவு திரைப்படம், பொங்கலை முன்னிட்டு 11ம் தேதி வெளியானது. விஜய்யின் வாரிசுடன் மோதிய துணிவுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் 200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அஜித்தின் ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதில் சில அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கதையில் திருப்தி இல்லை
அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். ஏகே 62 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என செய்திகள் வெளியாகி வந்தன. மேலும் அதற்காகவே அஜித் தாடி, மீசை இல்லாமல் புதிய கெட்டப்பில் வலம் வருவதாக சொல்லப்பட்டது. இதனிடையே விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லை என்றும், அதனால் விக்னேஷ் சிவனை இந்தப் படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

விஜய் ஸ்க்ரிப்ட்டில் அஜித்
அஜித்துடன் த்ரிஷா, அரவிந்த் சுவாமி, சந்தானம் என மெகா கூட்டணியுடன் ஏகே 62 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவந்தனர். இதனிடையே தான் அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியானது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அடுத்து விஜய்க்காக ஒரு கதையை தயாராக வைத்திருந்தார். தற்போது அந்த கதையில் தான் அஜித் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமரசம் பேசிய நயன்?
முதலில் ஏகே 62 படத்தை இயக்க விக்கிக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு நயன்தாரா தான் காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் இல்லை என்று தகவல் பரவி வருவதால் மீண்டும் நயன் களமிறங்கியுள்ளாராம். அதன்படி, லைகா நிறுவனத்திடமும் அஜித்திடமும் நயன்தாரா பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், நயன் சமரசம் பேசியும் லைகா ரெட் சிக்னல் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கதையில் திருப்தி இல்லாமல் தான் விக்னேஷ் சிவனுக்கு அஜித்தும் நோ சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











