Good Bad Ugly - குட் பேட் அக்லி.. வெளியானது ஏகே 63 டைட்டில்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிபாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

நோ அப்டேட்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. மாறாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அங்கு தொடங்கிய ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் சில நாட்கள் அவர் ரெஸ்ட்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
வெளியானது அறிவிப்பு: இந்நிலையில் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு என்று குட் பேட் அக்லி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்று இப்போதே கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த அப்டேட் ஸ்வீட் சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது. படமானது 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











