AK 63 Update - போடு வெடிய.. ஏகே 63 அப்டேட் எப்போ தெரியுமா?.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை: துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஏகே 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தற்கால இயக்குநர்களில் கவனத்தை ஈர்த்திருக்கும் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கிவருகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகத்தலைவன் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்தை சிறந்த படமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். துணிவு படம் எப்படி வெற்றியடைந்ததோ அதேபோல் இப்படமும் வெற்றியடையும் என்று ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து விடாமுயற்சி படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என நொந்துகொண்டனர். சூழல் இப்படி இருக்க அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்பட்டது. தற்போது மீண்டும் அஜர்பைஜானுகே செல்ல படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது.
ட்விஸ்ட்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு ட்விஸ்ட் நடந்தது. அதாவது அஜித்துக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அறுவை சிகிச்சை முடிந்தது. சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் சில வாரங்கள் அவர் ஓய்வு எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் கடைசியில் அஜித் ஷூட்டிங்கில் கலந்த்கொள்ள வய்ப்பிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுவது கவனிக்கத்தக்கது.
அடுத்த படம்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழலில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களாகவே பரவிவருகிறது. அதன்படி திரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் திரைத்துறையில் முணுமுணுப்பு எழுந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் இன்று காலையிலிருந்தே ட்விட்டர் களைகட்டிவருகிறது. அதாவது இன்று விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால் இன்று பிற்பகலிலிருந்து இன்னொரு தகவல் ட்விட்டரில் தீயாக பரவிவருகிறது. அதன்படி அஜித்தும், ஆதிக் ரவிச்சந்திரனும் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏகே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











