பாலய்யாவுக்கே பாயாசமா?.. கடைசி நேரத்தில் ரிலீஸாகாமல் போன அகண்டா 2.. என்ன பிரச்னை?
ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகண்டா 2 திரைப்படம் இன்று வெளியாவதாக இருந்தது. கண்டிப்பாக இந்தப் படத்தில் பாலய்யாவின் ருத்ரதாண்டவம் இருக்கும் என்று ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தார்கள். ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருக்கிறது. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகிலும் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
என்.டி.ஆரின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து பிறகு ஹீரோவாக மாறியவர். 90களில் ஆரம்பித்து இப்போதுவரை அவரது நடிப்பு பயணம் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விரைவில் ரிட்டையர்டு ஆகிவிடுவார் என்று பலரும் கூறிய சூழலில் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக நடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
சமீபத்திய படங்கள்: அவரது நடிப்பில் கடைசியாக டாக்கு மகாராஜ், வீர சிம்ஹா ரெட்டி, பகவத் கேசரி, அகண்டா ஆகிய படங்களில் பகவந்த் கேசரி சூப்பர் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தைத்தான் விஜய் ஜனநாயகன் பெயரில் ரீமேக்கியிருக்கிறார் என்றும் ஒரு பேச்சு உண்டு. மற்ற படங்களும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றன. இவற்றில் அகண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
அகண்டா 2: இந்தப் படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநரான போயாபதி சீனு இயக்கியிருக்கிறார். முதல் பாகம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் அது அதிகம் ட்ரோலுக்கு உள்ளானது. முக்கியமாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மீம் மெட்டீரியலாகவே மாறின. எனவே அதுபோன்று இதில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் படக்குழு திட்டவட்டமாக இருந்தது. இன்று படம் ரிலீஸாவதாக இருந்தது.
ரிலீஸில் தாமதம்: ஆனால் படம் இன்று ரிலீஸாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "எதிர்பாராத சூழ்நிலையால் அகண்டா 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் படம் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை.
என்ன காரணம்?: இது எங்களுக்கு வலி மிகுந்த தருணம். உங்கள் ஏமாற்றத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் புதிய அப்டேட் சொல்லப்படும்" என்ற குறிப்பிடப்பட்டிருந்தது. சூழல் இப்படி இருக்க அகண்டா 2 ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஈரோஸ் நவ் நிறுவனத்திடம் 14 ரிலீஸ் ப்ளஸ் கடன் வாங்கியிருப்பதாகவும்; அதனை திருப்பி தராததால் அந்த நிறுவனத்துக்கு எதிராக ஈரோஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதால்தான் இந்த ரிலீஸ் தாமதம் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











