ப்பா.. 3 நிமிஷத்தில் இத்தனை செல்ஃபியா? கின்னஸ் சாதனை படைத்த அக்ஷய் குமார்.. எதுக்கு தெரியுமா?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் வெறும் 3 நிமிடங்களில் அதிகப்படியான செல்ஃபி போட்டோக்களை எடுத்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் 2.0 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானவர் அக்ஷய் குமார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஜிகர்தண்டா படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த டிரைவிங் லைசன்ஸ் படத்தின் இந்தி ரீமேக் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

தொடர் தோல்வி அடைந்தாலும்
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கடைசியாக சூர்யவன்ஷி திரைப்படம் மட்டுமே ஹிட் அடித்தது. அதன் பின்னர், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பல படங்கள் கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்தன. தென்னிந்திய மொழி படங்களை ரீமேக் செய்து நடித்து வருகிறார் அக்ஷய் குமார். ஆனால், பாலிவுட் ரசிகர்களுக்கு அக்ஷய் குமாரின் நடிப்பு வெகுவாக ஈர்க்கவில்லையா? அல்லது கதை பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்திலேயே அவரது படங்கள் தோல்வியைத் தழுவினாலும், மனுஷன் அமீர்கான் மாதிரி எல்லாம் அப்செட் ஆகாமல் அடுத்தடுத்த படங்களில் ஜாலியாக நடித்து வருகிறார்.

ராமர் பாலம்
கடந்த ஆண்டு பெரும் பொருட் செலவில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ராம் சேது திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ராமர் பாலத்தை ராமர் தான் கட்டினார் என்பது போலவும், ராமர் மட்டுமில்லை, ராவணன் இருந்ததற்கும், சஞ்சீவி மூலிகை இருந்ததற்கும் ஆதாரங்கள் உண்டு என அந்த படத்தை உருவாக்கி இருந்தனர்.

184 செல்ஃபி எடுத்து கின்னஸ் சாதனை
புதன்கிழமையன்று தனது ரசிகர்களை ஒரே இடத்திற்கு வரவழைத்து வெறும் 3 நிமிடங்களில் அதிகபட்சமாக 184 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து உலக கின்னஸ் சாதனை முறியடித்துள்ளேன் என நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மலையாள படத்தின் ரீமேக்
இந்த வாரம் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி உள்ள செல்ஃபி திரைப்படம் வெளியாகிறது. 2019ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தின் ப்ரோமோட் செய்யும் விதமாகவே கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார் அக்ஷய் குமார்.

ஃபேன் படத்தின் கதையும் இதுதான்
தன்னை சந்தித்து போட்டோ எடுக்க வரும் ரசிகரை நடிகர் ஷாருக்கான் மதிக்காமல் விரட்டியடிக்க அந்த ரசிகர் ஷாருக்கானின் இமேஜை காலி செய்யும் படமாக ஃபேன் வெளியானது. மகனுடன் ஸ்டார் நடிகரான அக்ஷய் குமாரை சந்திக்க இம்ரான் ஹாஸ்மி செல்ல, அங்கே ஏற்படும் அவமானம் காரணமாக ஸ்டார் நடிகரின் இமேஜை இறக்கும் படமாகவே இந்த படமும் உருவாகி உள்ளது. இதனால், இந்த முறையும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அக்ஷய் குமார் ஹிட் அடிக்குமா என்பது கேள்விக்குறி தான்.

பதான் பாணியில்
சமீபத்தில் சட்டையை கழட்டி பதான் ஷாருக்கான் பாணியில் அக்ஷய் குமார் நடனமாடிய குடியீ நி டெரி பாடல் வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கினார். சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் தீபிகா படுகோனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு கவர்ச்சி டான்ஸ் போட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் அக்ஷய் குமார் கம்பேக் கொடுக்கிறாரா இல்லையா என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











