தலைவா படத்தோட ரியல் பிரச்சனை.. டைட்டில் தராத மணிரத்னம்.. ஓபனாக பேசிய ஏ.எல். விஜய்!
சென்னை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய், சத்யராஜ், அமலா பால், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான தலைவா படம் ஏகப்பட்ட சிக்கல்களை கடந்து வெளியானது. அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் சுவாரசிய சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் ரூட்டை எடுப்பதற்கு முக்கிய காரணமாக மாறியதே அந்த படம் தான் என்றும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டது. அத்தனை தடைகளையும் தாண்டி தனது படத்தை நடிகர் விஜய் எப்படி வெளியிட்டார் என்பது குறித்து ஏ.எல். விஜய் கூறியுள்ளார்.

தலைவா திரைப்படம் தனக்கு வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாத படம் என்றும் நல்லா இல்லை என்றால் ஓடாமல் போகலாம். ஆனால், சூழ்நிலை காரணமாக தோல்வியை தழுவக் கூடாது என நடிகர் விஜய் அந்தப் படத்துக்கான சிறந்த நடிகர் விருதை வாங்கும் போது பேசியதையும் தலைவா படத்தின் இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணிரத்னம் டைட்டில் தரல: ஆரம்பத்தில் தலைவன் என்கிற டைட்டிலை தான் தலைவா படத்துக்கு வைக்க நினைத்தோம். ஆனால் எம்ஜிஆர் படத்தின் டைட்டில் என்பதால், அந்த டைட்டில் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் டைட்டிலை வைக்க முடிவு செய்தோம். அதுதொடர்பாக இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சென்று சந்தித்து பேசினேன். அப்போது, இந்த படம் யூனிக்கான படம் இதற்கு யூனிக்கான டைட்டில் வை தளபதி டைட்டில் செட்டாகாது என்றார். ஜாம்பவான் இயக்குநர் சொன்னதை ஏற்றுக் கொண்டு என்ன டைட்டில் வைக்கலாம் என யோசித்த போது கடைசியாக தலைவா டைட்டில் லாக் ஆனது என்றார்.
10 நாள் பிரச்சனை: தமிழ்நாட்டைத் தவிர கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தலைவா திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தான் படம் வெளியானது. அந்த 10 நாட்களும் விஜய் எங்களுடனே இருந்தார். தயாரிப்பாளருக்கு அந்தளவுக்கு தைரியம் கொடுத்து படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடலாம் என அனைத்து தரப்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி படத்தை வெளியிட வைத்தார் என்றார்.
திருட்டு விசிடி: தலைவா திரைப்படம் பக்கத்து மாநிலங்களில் வெளியான நிலையில், ஆகஸ்ட் 21ம் தேதி தமிழ்நாட்டில் படம் வெளியானது. ஆகஸ்ட் 20ம் தேதி நாளை படம் வெளியாகி விடும் என்கிற நிம்மதியுடன் சங்கீதா ஹோட்டலில் என்னுடைய டீமுடன் சாப்பிட சென்றேன். அங்கே ஒருவர் தன்னுடைய பையனுடன் வந்து சாப்பிடும் போது எங்களை அடையாளம் கண்டுக் கொண்டு இவர் தான் தலைவா படத்தின் இயக்குநர் என பேசினார். நாளை படம் ரிலீஸ் என்றார். அந்த பையன் உடனடியாக அந்த படத்தை தான் சிடியில 3 வாட்டி பார்த்துட்டோமேப்பா என்றான். எனக்கு இடி விழுந்தது போல இருந்துச்சு. படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பாதி பேர் படத்தை பார்த்து விட்டனர் என்பது தான் உண்மை. அந்த படம் தியேட்டரில் தோல்வியை தழுவவும் அதுதான் காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications