Karuppu Release: எல்லா பிரச்னைகளும் ஓவர்.. தயாரிப்பாளர் உருக்கம்.. கருப்பன் வரான் வழி மறிக்காதே
சென்னை: நடிகர் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, RJ பாலாஜி எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் கருப்பு. எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் முன் பதிவும் ஜோராக நடந்தது. ஆனால் படம் எதிர்பார்த்ததைப் போல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளானார்கள். இப்படி இருக்கையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படம் வெளியாகிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " சில பயணங்கள் காலத்தை மட்டுமல்ல, இதயத்தையே சோதிக்கின்றன. கருப்பு படத்திற்காகக் காத்திருந்த, படத்தின் ரிலீஸ் பற்றித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த, அமைதி மற்றும் தாமதங்களுக்கு மத்தியிலும் எங்கள் மீது நம்பிக்கை இழக்காத ஒவ்வொருவருக்கும், நாங்கள் மன்னிப்புக் கேட்க கடமைப்பட்டுள்ளோம். அதைவிட முக்கியமாக, எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்பிக்கை: இந்தக் காத்திருப்பு வேதனையானது என்பது எங்களுக்கும் நன்றாகவே புரிகிறது. உங்களில் பலர் இந்தப் படத்தை பார்க்க மிகுந்த அன்போடும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்கள் என்பதும் எங்களுக்கு புரிகிறது. படம் வெளியாக ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்துமே எங்களுக்கு பெரும் பாரமாக மாறிவிட்டது. நமக்கு சாதகமாக எதுவும் நடக்காத போதும் கூட, ரசிகர்களாகிய உங்கள் ஆதரவும், நீங்கள் அனுப்பிய நம்பிக்கையூட்டும் மெசேஜ்களும், உங்கள் நம்பிக்கையும், உங்கள் எல்லையற்ற அன்பும்தான் இந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

கருப்பு ரிலீஸ்: இன்று, நிறைந்த இதயங்களுடனும் நன்றிக் கண்ணீருடனும், நாங்கள் இறுதியாகச் சொல்கிறோம், கருப்பு உலகெங்கிலும் வெளியாகிறது! இந்தப் படம் எங்கள் ரத்தம், வியர்வை, பல தூக்கமில்லாத இரவுகள், போராட்டங்கள் மற்றும் உணர்ச்சிகளைத் தாங்கி, அதன் வடிவமாக வருகிறது. கருப்பு, இனி எங்கள் கதை மட்டுமல்ல - இந்தப் பயணத்தில் எங்களுடன் துணை நின்ற ரசிகர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. காத்திருந்ததற்கு நன்றி. நம்பியதற்கு நன்றி. திரையரங்குகளில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளனர். தயாரிப்பு நிறுவனத்தின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் படத்திற்கான புக்கிங் என்பது உலகம் முழுவதும் மீண்டும் தொடங்கி உள்ளது. பல தியேட்டர்களில் பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது.


Click it and Unblock the Notifications