சூர்யாவின் அகரம் துணை வேண்டுமா?.. இதெல்லாம் இருக்க வேண்டும்.. முழு விபரம் இதோ
சென்னை: சூர்யா கடந்த 15 வருடங்களாக அகரம் ஃபவுண்டேஷனை நடத்திவருகிறார். இந்த அமைப்பு மூலம் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் படித்து இன்று நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள். சமீபத்தில்தான் அகரம் அமைப்பின் 15ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் அகரத்தால் வாழ்க்கை தரத்தை உயர்த்திய மாணவர்கள், கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
சூர்யா மிக சிறந்த நடிகன் என்பது மட்டுமில்லை மிக சிறந்த மனிதர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சினிமாவில் நடித்து சம்பாதித்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நல்ல செயல்களையும் செய்கிறார். அப்படி அவர் செய்ததில் மிக உயர்ந்ததுதான் அகரம். இந்த அமைப்பை அவர் 15 வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். விஜய், ஜோதிகா, மாதவன், சூர்யா ஆகியோர் இதற்காக ஒரு விளம்பர படத்திலும் நடித்தார்கள்.
அகரத்தால் உயர்ந்த கரங்கள்: ஏழை மாணவர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற அகரம் தனது கரங்களை கொடுத்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் படித்து இன்று செட்டில் ஆகி நிம்மதியாக இருக்கிறார்கள். சமீபத்தில்தான் அதன் 15ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் அகரத்தால் பலன் அடைந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கை எங்கிருந்து எப்படி வந்திருக்கிறது என்பதை விவரித்து அகரத்தையும், சூர்யாவையும் நெகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்தார்கள்.

இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள். அவர்கள் இரண்டு பேரும் பேசியதும் பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அகரம் ஃபவுண்டேஷனின் உதவியை எப்படி பெற வேண்டும் என சில மாணவர்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கிறது. எனவே அதனை எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்.
எப்படி பெற வேண்டும்: அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு, நிரந்தரமான வீட்டு முகவரி, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், 10ஆம் வகுப்பு மார்க் ஷீட், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் அவர் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருக்க வேண்டும். ஊரக பகுதியில் அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்கலாம்.
அகரம் அமைப்பில் சேர, அதிகாரப்பூர்வ இணையதளமான https://scholarshipamount.com/www-agaram-in-scholarship/க்கு சென்று அதில் "Agaram foundation scholarship 2025 for college students" என்பதை இடுகையிட வேண்டும். அப்போது தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள், கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள், புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தவை அனைத்தும் சரிதானா என்பதை சோதனை செய்வதற்கு அகரம் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கு சென்று ஆராய்வார்கள் என்பதும்; அதற்கு பிறகுதான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு தொகை?: கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ படிப்பதற்கு மாணவர் ஒருவருக்கு மூன்று வருடங்களுக்கு இரண்டரை ரூபாய் லட்சத்தை அகரம் அமைப்பு ஏற்கிறது. அதேபோல் மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க நான்கு ஆண்டுகள் முதல் ஐந்தரை ஆண்டுகள்வரை 4.50 லட்சம் ரூபாயை ஏற்கிறது.


Click it and Unblock the Notifications











