Allu Arjun: எல்லாம் முடிஞ்சுது.. துக்க வீடுபோல் காட்சியளிக்கும் அல்லு அர்ஜுன் வீடு.. விபரம் இதோ!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம்தான் நேற்றைய பரபரப்புச் செய்தி. அதுவும் மாவட்ட நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த பின்னர், அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. ஆனால், மாவட்ட நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதனால், உடனே தெலங்கானா உயர்நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனு அளித்தனர். தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அதற்குள், அல்லு அர்ஜுனை சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலையில் காவல்துறையினர் அடைத்தனர். மேலும் உயர்நீதிமன்றம் அளித்த ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தயார் செய்வதில் தாமதமானதால், நேற்று,அல்லு அர்ஜுன் சிறையிலேயே இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படியான நிலையில் அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவரது வீடு ஒரு துக்கம் நடைபெற்ற வீட்டினைப் போல் உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ப்ரீமியர் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால் நள்ளிரவில் படம் திரையிடப்பட்டது. இப்படியான நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில், ப்ரீமியர் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு இருந்தனர். இப்படியான நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் காவல்துறைக்கு முன் அறிவிப்பு எதுவும் கூறாமல், படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்தார். அல்லு அர்ஜுனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் ரசிகர்கள் மத்தியில், நெரிசல் அதிகரித்தது.

இதனால் ஏற்பட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரேவதியின் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில், ரேவதியின் மரணத்திற்கு அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகத்தினர்தான் காரணம் எனக் கூறி, காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
கைது: இந்த வழக்கு தொடர்பாக நேற்று காவல்துறை அல்லு அர்ஜுனை கைது செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கடபள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபரம் தெரிந்ததும் ரசிகர்கள் காவல்நிலையத்தைச் சூழ்ந்தனர். மேலும், தயாரிப்பாளர் தில் ராஜு உடனே காவல்நிலையத்திற்கு வந்தார். சிரஞ்சீவியும் வருவதாக இருந்தது. ஆனால் அவரை காவல்துறை சார்பில் காவல்நிலையத்திற்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதால், அவர், அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்.

சிறை: அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், மனம் உடைந்து அழுது கொண்டு நின்ற அவரது மனைவி, சினேஹா ரெட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து, அழக்கூடாது, தைரியமாக இருக்கவேண்டும் எனக் கூறினார். அப்படியான நிலையில், அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து வீட்டுக்கு வந்துவிடுவார் என மொத்த குடும்பத்தினரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும், அல்லு அர்ஜுனால் வீட்டிற்குத் திரும்பமுடியவில்லை.

துக்க வீடு: உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பாக ஆவணங்களைத் தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், அல்லு அர்ஜுன் நேற்று இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஏ-1 ரக சிறை தயார் செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் கவலைக்கு ஆளாகினர். திரைத்துறையில் இருந்து அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு பெருகி வருகின்றது. அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது வீடு ஒரு துக்க வீட்டினைப்போல் காட்சி அளிக்கின்றது. அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











