Allu arjun: பாதுகாப்பு நெறிமுறைகளை நடிகன் கையில் எடுக்க முடியாது.. அல்லு அர்ஜுனுக்கு பெருகும் ஆதரவு!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக இன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். அவரது புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சில தினங்களிலேயே 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
இந்தப்படத்திற்காக புஷ்பா 2 டீம் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களை மேற்கொண்டது. ரிலீசுக்கு முந்தைய தினம் ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்ததுதான் இந்த சம்பவம் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ரசிகர்களை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. சந்தியா திரையரங்கின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் வெளியான நிலையில் படம் சில தினங்களிலேயே ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சுகுமார் உள்ளிட்ட பலரும் டெல்லி, மும்பை, பாட்னா, சென்னை, ஐதராபாத், கொச்சி ஆகிய இடங்களில் பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர். இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு ஹைதராபாத்தில் கடந்த 4ம் தேதி பிரீமியர் ஷோ நடந்தது. இந்த ஷோவில் முன்னறிவிப்பு இன்றி நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க வந்தனர்.
கூட்டநெரிசலில் பெண் பலி: இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திடீரென திரையரங்க வாயிலில் கூடியதால் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் பொதுமக்களை தள்ளி விட்டதாக தெரிகிறது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற இளம் பெண் மற்றும் அவரது ஒன்பது வயது மகன் இருவரும் மயங்கி விழுந்தனர். இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ரேவதி முன்னதாகவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது மகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வீடியோ மூலம் வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன் தொடர்ந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி இருந்தார்.
கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன்: இந்த விவகாரத்தில் தற்போது தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயினும் அவர் திங்கட்கிழமை வரை சிறையில் இருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தயாரிப்பாளர் தில் ராஜ் உள்ளிட்ட பலரும் அவரது வீட்டிற்கும் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் மற்றவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர்கள் ஆதரவு: இந்த விவகாரத்தில் நடிகர் நானி அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் தவறு செய்பவர்கள் தான் என்றும் இந்த விஷயத்தில் பாடம் கற்றுக் கொண்டு தொடர்ந்து கவனமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை மட்டுமே பொறுப்பாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பாலிவுட் நடிகர் வருண் தவானும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். நடந்த தவறுக்கு அவர் ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல பல நடிகர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











