சீரஞ்சீவிக்கு முதல் பத்திரிகை வைத்த அல்லு அர்ஜுன் தம்பி.. தாய்மாமன்னா சும்மாவா?
ஹைதராபாத்: மெகா தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் நிறுவனர் அல்லு அரவிந்தின் இளைய மகன் அல்லு சிரிஷ் - நயனிகா ரெட்டி திருமணம் மார்ச் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் மும்முரம் காட்டி வருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் மணமக்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அல்லு அரவிந்த் குடும்பத்தினர் 'பசுப்பு தந்தேடு' சடங்குடன் திருமண நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
அல்லு சிரிஷ் தனது மாமா மெகாஸ்டார் சிரஞ்சீவி மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், திறமையால் தெலுங்குத் திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழும் சிரஞ்சீவி, எந்த ஒரு சாதாரண மனிதனும் அசாதாரண உயரங்களை அடைய முடியும் என்பதற்கு கோடிக்கணக்கானோருக்கு முன்மாதிரியாகிறார். அவர் மெகா சாம்ராஜ்யத்தை உருவாக்கி, தெலுங்குத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
சிரஞ்சீவி வகுத்த பாதையில், பவன் கல்யாண், நாக பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண், சாய் தரண் தேஜ், வருண் தேஜ், வைஷ்ணவ் தேஜ், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பலரும் கதாநாயகர்களாக அறிமுகமாகி, தனி இடத்தைப் பிடித்துள்ளனர். மெகா குடும்ப நட்சத்திரங்களான சுஸ்மிதா கொனிடேலா, நிஹாரிகா கொனிடேலா ஆகியோரும் தயாரிப்பாளர்களாக வலம் வருகின்றனர். சிரஞ்சீவி இவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், குடும்பத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கிறார்.

குடும்ப ஒற்றுமையே தனது பலம் என நம்பும் மெகாஸ்டார், அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்து கொள்வதை உறுதி செய்கிறார். அவரது வலுவான அடித்தளங்களே மெகா குடும்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றன. மாமா சிரஞ்சீவி மீது தனக்குள்ள பற்றை அல்லு சிரிஷ் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
சிரஞ்சீவி: ஒருமுறை சிரஞ்சீவி பற்றிப் பேசிய சிரிஷ், “என்னை வளர்த்தவர் சிரஞ்சீவி மாமாதான். அவர் மிக உணர்ச்சிவசப்படுபவர், எவ்வளவு நல்லவர் என்றால், அவர் எனக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரி. எங்கள் குழந்தைகள் அவரைப் போன்றதொரு மாமா வேண்டும் என விரும்புவார்கள். நான் வளர்ந்த பிறகு, அவரைப் போன்ற கணவனாக இருக்க வேண்டும்; எனக்கு மாப்பிள்ளை இருந்தால், அவரைப் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
அப்பாவை விட: மாமா வழியிலேயே சமுதாயத்திற்குப் பயன்படும் வேலையைச் செய்ய விரும்புகிறேன். மாமா மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்; ஒரு பெரிய சமுத்திரம், அவரைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? என் அப்பாவை விட எனது மாமாதான் என்னை அதிக வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் சென்றார். என் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு என் அப்பா மறந்து விடக்கூடும், ஆனால் காலையில் 8 மணிக்கெல்லாம் என் மாமா நிச்சயமாக போன் செய்வார்” என்று அல்லு சிரிஷ் உணர்ச்சிவசப்பட்டு கூறினார். விரைவில் மணக்கவுள்ள அல்லு சிரிஷ், மாமா சிரஞ்சீவி மீதுள்ள அன்பை மீண்டும் வெளிப்படுத்தினார். மார்ச் 6 ஆம் தேதி திருமணத்திற்கு அழைப்பிதழ்களை வழங்கும் நடைமுறையை சிரிஷ் குடும்பத்தினர் தொடங்கியுள்ளனர். முதல் அழைப்பிதழை சிரஞ்சீவி குடும்பத்திற்கு அல்லு குடும்பத்தினர் வழங்கினர்.

முதல் பத்திரிக்கை: பிப்ரவரி 15 அன்று, ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் வீட்டிற்கு தனது பெற்றோர்களான அல்லு அரவிந்த் மற்றும் நிர்மலாவுடன் சிரிஷ் சென்றார். அங்கு சிரஞ்சீவி - சுரேகா தம்பதியினரிடம் முதல் அழைப்பிதழை அளித்து, அவர்களது ஆசீர்வாதங்களைப் பெற்றார். இது தொடர்பான புகைப்படத்தை சிரிஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
தெலுங்கு பாரம்பரியம்: அதில், “நம் தெலுங்கு பாரம்பரியப்படி, முதல் திருமண அழைப்பிதழை என் மாமா சிரஞ்சீவி மற்றும் அத்தை சுரேகாவிடம் வழங்கினேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தில் சிரஞ்சீவி தனது இடது கையில் கட்டுடன் காணப்படுவதால், அவருக்கு என்ன ஆனது, ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











