10வது ஆண்டு திருமண நாள்.. மறக்க முடியாத இடத்துக்கு மனைவியை கூட்டிட்டுப் போன அல்லு அர்ஜுன்!
ஆக்ரா: டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் தனது 10வது ஆண்டு திருமண நாளை மனைவியுடன் தாஜ்மகாலில் கொண்டாடி உள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ இந்தியளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

ஸ்டைலிஷ் ஸ்டார்
தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஷ் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் வலம் வருபவர் அல்லு அர்ஜுன் தான். சர்வ சாதாரணமாக கஷ்டமான நடன அசைவுகளை ஆடி அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். 2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். 2004ல் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

சென்னை பையன்
டோலிவுட்டை கலக்கி வரும் அல்லு அர்ஜுன் 1983ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நிர்மலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அல்லு அர்ஜுனின் சொந்த அத்தை தான் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகையே இந்த கொனிடேலா குடும்பம் தான் அதிகளவில் ஆட்சி செய்து வருகிறது.

சினேகா ரெட்டி
கடந்த 2011ம் ஆண்டு ஹைதராபாத்தில் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அல்லு அர்ஜுன். அயான் எனும் ஆண் குழந்தையும் அரா எனும் பெண் குழந்தையும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு உள்ளனர். கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் உலக ஃபேமஸ்.

10 ஆண்டு கால பந்தம்
இந்நிலையில், நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் தனது 10ம் ஆண்டு திருமண நாளை தனது மனைவியுடன் கோலாகலமாக கொண்டாடினார். தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பாக அல்லு அர்ஜுன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அல்லு அர்ஜுனை வாழ்த்தி வருகின்றனர்.

தாஜ்மகால்
திருமண நாளை மறக்க முடியாத இடத்தில் கொண்டாட வேண்டும் என்பதற்காக உலக காதலர்களின் சின்னமாக இருக்கும் தாஜ்மகாலில் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடினார் நடிகர் அல்லு அர்ஜுன். வெள்ளை நிற உடையில் இருவரும் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளது.

ஆக்ரா போலீசாருக்கு நன்றி
10ம் ஆண்டு திருமண நாளை தாஜ்மகாலில் கொண்டாட தங்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த ஆக்ரா காவல்துறைக்கு போட்டோ போட்டு தனது நன்றியையும் நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள புஷ்பா படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











