ரூ. 7 கோடிக்கு வேனிட்டி வேன் வாங்கிய நடிகருக்கு போலீஸ் அபராதம்
ஹைதராபாத்: ரூ. 7 கோடிக்கு வேனிட்டி வேன் வாங்கிய நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சைபரபாத் போலீசார் ரூ. 735 அபராதம் விதித்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 7 கோடிக்கு வேனிட்டி வேன் வாங்கியுள்ளார். அந்த வேனை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மக்களின் அன்பால் தான் இது சாத்தியமானது என்று கூறி நன்றி தெரிவித்திருந்தார். தனது வேனுக்கு ஃபால்கன் என்று பெயர் வைத்துள்ளார்.

கடந்த 16ம் தேதி அல்லு அர்ஜுனின் வேன் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகர் அருகே நிற்பதை முகமது அப்துல் ஆசாம் என்பவர் பார்த்துள்ளார். (அவருக்கு அது அல்லு அர்ஜுனின் வாகனம் என்று தெரியாது). உடனே அவர் அந்த வாகனத்தை புகைப்படம் எடுத்து சைபராபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அல்லு அர்ஜுன் வாகனத்தில் உள்ளே இருப்பது வெளியே தெரியாத வகையில் டின்டட் கிளாஸ் போடப்பட்டிருந்தது.
அதை தான் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்தார். மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனங்களில் டின்டட் கிளாஸ் போட தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆசாம் அளித்த புகாரின்பேரில் TS 09 FG 6666 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அது நடிகர் அல்லு அர்ஜுனின் வாகனம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து விதியை மீறியதற்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ. 735 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து தான் விபரம் தெரிய வந்தது. அல்லு அர்ஜுனுக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது அந்த ஃபால்கன். போக்குவரத்து விதிகளை மீறக் கூடாது என்று தனது ரசிகர்கள தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் அல்லு அர்ஜுன். இந்நிலையில் அவரே விதியை மீறி அபராதம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.
அல்லு அர்ஜுன் தற்போது ஏஏ19 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கி வரும் அந்த படத்தில் பாலிவுட் நடிகை தபு, பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











