வைரலாகும் பிரபல காமெடி நடிகர் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியம்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல காமெடி நடிகர் வரைந்துள்ள வெங்கடாஜலபதி ஓவியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம். தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கிறார்.
அங்கு வெளியாகும் பெரும்பாலான படங்களில் இவர் கண்டிப்பா இருப்பார். பிற மொழிகளிலும் நடித்துள்ள இவர், தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் லிங்கா
எஸ்.ஜே.சூர்யாவின் நியூ, ஜோதிகா நடித்த மொழி, ரஜினியின் குசேலன், விஷால் நடித்த சத்யம், ராதாமோகன் இயக்கிய பயணம், தோனி, ரஜினியின் லிங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் சந்தானத்தின் டகால்டி படத்தில் நடித்திருந்தார். அதிக படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை விருதையும் பெற்றுள்ளார்.

பென்சில் ஓவியம்
இவர், ஓவியம் வரையும் திறமை கொண்டவர். கொரோனா லாக்டவுனில் வரைந்த ஓவியங்கள் ரசிகர்களை கவர்ந்தன. அவர் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுவது, தெலுங்கு கவிஞர் ஶ்ரீ ஶ்ரீ, ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரின் ஓவியங்களை பென்சிலில் வரைந்திருந்தார்.

அல்லு அர்ஜூன்
அவருடைய ஓவிய திறமையை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அதோடு அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், இந்த புத்தாண்டை ஒட்டி, தான் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியத்தை, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பரிசாக வழங்கினார்.

விலைமதிப்பற்ற பரிசு
இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த அல்லு அர்ஜூன், எனது அன்பான, நடிகர் பிரம்மானந்தத்திடம் இருந்து விலைமதிப்பில்லா பரிசை பெற்றுள்ளேன். 45 நாட்கள் உழைத்து, பென்சிலில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். நன்றி எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த ஓவியம் சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பிரம்மானந்தத்தைப் பாராட்டி வருகிறனர்.


Click it and Unblock the Notifications











