ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை.. அல்லு அர்ஜுன் செய்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?
அமராவதி: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக இதுவரை 10 பேர்வரை உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் அங்கு பெரும் சோகம் நிலவிவருகிறது. சூழல் இப்படி இருக்க மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் நிதியுதவி அளிப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக இந்த மழை பெய்திருக்கிறது. ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா மாநிலத்திலும் கடுமையான மழை பெய்ததால் அந்த மாநில மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக அங்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன.

200 ஆண்டுகளில் இல்லாத மழை: ஆந்திராவை பொறுத்தவரை மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. 200 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவு மழை அங்கு பொழிந்திருக்கிறது. இதுவரை 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை காக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் மக்கள் தங்குவதற்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
முதலமைச்சரின் ஆய்வு: பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருப்பதால் ஆந்திராவில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. கனமழை பெய்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களையும் பகுதிகளையும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். மேலும் உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடனும் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். தெலங்கானாவிலும் இதே அளவு பாதிப்பு இருக்கிறது.
போக்குவரத்து பாதிப்பு: அதேபோல் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி சாலைகளும் பாதிக்கப்பட்டிருப்பதால் சாலை போக்குவரத்தும் முடங்கியிருக்கிறது. அதிகபட்சமாக என்டிஆர் மாவட்டம் வட்சவை பகுதியில் 32.3 செமீ மழையும், ஜக்கையா பேட்டில் 20.27 செமீ மழையும் பதிவாகியிருக்கின்றன. இதற்கிடையே ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுன் நிதியுதவி: இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதேபோல் பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமும் ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











