அர்ஜுன் ரெட்டி இயக்குநருடன் கைகோர்க்கும் அல்லு அர்ஜுன்.. வெளியானது புதிய அப்டேட்
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா பெரும் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அளவில் அறியப்படும் நடிகராக மாறினார் அல்லு அர்ஜுன்.

புஷ்பா 2வில் அல்லு அர்ஜுன்
புஷ்பா படம் ஹிந்தியிலும் வசூல் வேட்டை நிகழ்த்திய சூழலில் தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சுகுமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் அடுத்த படம்
இந்நிலையில் புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற கேள்வி தெலுங்கு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அல்லு அர்ஜுன் அடுத்ததாக சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி மூலம் கவனம் ஈர்த்த சந்தீப் ரெட்டி
இயக்குநர் சந்தீப் ரெட்டி தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் ஜொலிக்கும் சந்தீப்
சந்தீப் ரெட்டி இப்போது ஹந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கிவருகிறார். மேலும் பிரபாஸை வைத்து ஸ்பிரிட் என்ற படத்தையும் அவர் ஆரம்பிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











