Pushpa 2 Box Office Day 14: 2 வாரத்தில் புஷ்பா 2 செய்த சம்பவம்.. ஏகபோக கலெக்ஷன்.. விவரம்!
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம். படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்தனர். படம் செம்மரம் கடத்தல்காரனை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தின் முதல் பாகமே பெரும் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஆனதைத் தொடர்ந்து படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
புஷ்பா 2 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே சுமார், ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் செய்ததால், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தின் ரிலீஸினால், கிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் படத்தின் ஐமேக்ஸ் ரீரிலீஸ் இந்தியாவில் மட்டும் ஒத்திப்போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

படம் வெளியான நாளில் நள்ளிரவு திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவினை, ரசிகர்களுடன் பார்க்க அல்லு அர்ஜுன் காவல்துறையிடம் முன்னறிவிப்பு தெரிவிக்காமல், சென்றதால், ரேவதி என்ற பெண் ரசிகை ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதுமட்டும் இல்லாமல், அவரது மகனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில், கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். 9 வயது சிறுவனான அந்த சிறுவனுக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது.

அல்லு அர்ஜுன் கைது: இந்த விவகாரம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் கடந்த 13ஆம், தேதி கைது செய்யப்பட்டு, 14ஆம் தேதி காலை விடுவிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. குறிப்பாக, 13ஆம் தேதி இரவு, சிறையில் தரையிலேயே படுத்திருந்துவிட்டு வெளியேறியுள்ளார் அல்லு அர்ஜுன். இப்படியான நிலையில், அல்லு அர்ஜுனுக்கு எதிராக தெலங்கானா அரசு மிகவும் உறுதியாக இப்போதும் உள்ளது. தாய் அதையடுத்து மகன் என, அல்லு அர்ஜுனின் பொறுப்பற்ற செயலால் இரண்டு அப்பாவி உயிர்கள் போயுள்ளது. ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது என இணையவாசிகள் அல்லு அர்ஜுன் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இரண்டு வாரம்: இப்படியான விஷயங்கள் ஒருபுறம் சென்றாலும், புஷ்பா 2 படத்தின் வசூலில் கொஞ்சமும் தொய்வில்லாமல் சென்றுகொண்டுள்ளது. குறிப்பாக ஹிந்தி மார்க்கெட்டில் புஷ்பா 2 படம் நாளுக்கு நாள் சம்பவம் செய்துகொண்டு உள்ளது. அதாவது படம் ஹிந்தி மார்கெட்டில் மட்டும் இதுவரை அதாவது 14 நாளில் ரூபாய் 620 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. இதுவரை எந்த படமுமே ஹிந்தி மார்க்கெட்டில் இவ்வளவு வசூல் குவிக்கவில்லை.

வசூல்: படம் 11 நாளில் ரூபாய் 1,409 கோடிகள் உலகம் முழுவதும் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படியான நிலையில் படம் ரிலீஸாகி, நேற்றுடன் அதாவது, டிசம்பர் 18ஆம் தேதியுடன் இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 14 நாட்களில் படம் மொத்தம் ரூபாய் 1500 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. படம், இன்னும் நன்றாகவே வசூல் குவித்து வருவதால், அடுத்த இரண்டு வாரங்களில் படத்தின் வசூல் எப்படியும் ரூபாய் 1650 கோடிகள் வரை அள்ளும் என கூறப்படுகின்றது. படத்தை தயாரித்த மைத்ரீ நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.



Click it and Unblock the Notifications











