Pushpa 2 Box Office: 6 நாளில் ஆயிரம் கோடிகளை அள்ளிய அல்லு அர்ஜுன்.. பஞ்சாக பறந்த பாகுபலி ரெக்கார்ட்!
சென்னை: இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக மட்டும் இல்லாமல், இதுவரையிலான இந்திய சினிமாவில் பிரமாண்டமான வெற்றிப் படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு படத்தின் வெற்றி என்பது, தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகின்றது என்பதை மையமாகக் கொண்டு, கணக்கிடப்படுவதில்லை. மாறாக படம் எவ்வளவு வசூல் குவித்தது என்பதை மையமாகக் கொண்டு வெற்றி கணக்கிடப்படுகின்றது. இப்படியான நிலையில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன புஷ்பா 2 படத்தின் வசூல் நிலவரம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
புஷ்பா 2 திரைப்படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு ரசிகர்கள் பலர் ரிப்பீட் ஆடியன்ஸாக வந்து கொண்டு இருக்கின்றனர். இதுமட்டும் இல்லாமல், படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு கிளாமர் பாட்டுகளுக்கு ஆண் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர். குறிப்பாக படக்குழுவினரால், கிளாமர் பாடல் எனக் கூறப்பட்ட கிஸ்க் பாடலைவிடவும், பீலிங்ஸ் பாடலும் நடன அசைவுகளும்தான் ஏகப்பட்ட கிளாமர்.

படத்தில் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடங்களுக்குள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் அளவுக்கான காட்சிகளை அமைத்து, திரைக்கதையில் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குநர் சுகுமார். அதேபோல் அல்லு அர்ஜுன் படம் முழுவதும் படத்தை தூக்கிச் சுமக்கும் நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் நீளம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியூட்டுவாதாக இருக்கின்றது.
பண மழை: படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் 1000 கோடிகளுக்கு வியாபரம் செய்தது. இதில் ஓடிடி ரிலீஸ் மட்டும்ம் ரூபாய் 275 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இல்லாமல், பாடல்கள் உரிமம் என ஆன்லைன் வியாபாரத்தில் மட்டுமே, படம் கிட்டத்தட்ட, ரூபாய் 400 கோடிகளுக்கு மேல் அசால்ட்டாக வியாபாரம் செய்தது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை: இப்படியான நிலையில் படம் வெளியான நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்தவண்ணம் இருந்துகொண்டே உள்ளது. முதல் நாளில் படம் ரூபாய் 294 கோடிகளை வசூல் செய்தது. இது இதுவரையிலான இந்திய சினிமாவில், வேறு எந்தப் படமுமே முதல் நாளில் இந்த அளவுக்கு வசூல் குவித்ததில்லை. மேலும், படத்தின் தினசரி வசூல் விபரம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு உள்ளது.

1000 கோடிகள்: படம் முதல் நாளில், 294 கோடிகளிலும், இரண்டாவது நாளில், 449 கோடிகளும், மூன்றாவது நாளில், 621 கோடிகளும், நான்காவது நாளில் 829 கோடிகளும் ஐந்தாவது நாளில் 922 கோடிகளும் வசூல் குவித்ததாக, படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படியான நிலையில், புஷ்பா 2 6வது நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 85 முதல் ரூபாய் 90 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில், படத்தின் மொத்த வசூல் என்பது, ரூபாய் 1010 கோடிகளில் இருந்து ரூபாய் 1015 கோடிகள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிவேகமாக 1000 கோடிகளை அள்ளிய படமாக புஷ்பா 2 சாதனை படைத்துள்ளது.



Click it and Unblock the Notifications











