தமிழில்தான் நான் பேசுவேன்.. புஷ்பா 2 விழாவில் தெலுங்கு ரசிகர்களிடம் அல்லு அர்ஜுன் அதிரடி
சென்னை: இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக இருக்கிறது புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படமானது டிசம்பர் 5ஆம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் போல் இதுவும் மெகா ஹிட்டாகுமா இல்லை எப்போதும் இரண்டாம் பாகத்துக்கு இருக்கும் சாபம் இந்தப் படத்துக்கும் தொடருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
தெலுங்கில் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். சினிமா குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் தனது அழகு மற்றும் திறமையால் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் அவர் அசத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து இந்திய அளவில் தனது மார்க்கெட்டை எப்படியாவது வளர்த்து தெலுங்கு சினிமாவின் முகமாக மாற வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தார்.

புஷ்பா: அவரது அந்த காத்திருப்பை சுகுமார் இயக்கியிருந்த புஷ்பா திரைப்படம் முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பான் இந்தியா அளவில் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அந்தப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அல்லு அர்ஜுன் அடையாளப்பட்டார்.
தேசிய விருது: கமர்ஷியல் ரீதியாக படம் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக அப்படி இப்படித்தான் ரிவ்யூக்களை பெற்றது. இருந்தாலும் தெலுங்கு சினிமாவுக்கும் புதிய அடையாளமாக புஷ்பா மாறியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அந்தப் படம் அல்லு அர்ஜுனுக்கு பெற்றுக்கொடுத்தது. அதிலும் தெலுங்கு திரையுலகிலிருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியது அல்லு அர்ஜுன் என்பது கூடுதல் சிறப்பு.
புஷ்பா 2: இப்படி பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறது புஷ்பா திரைப்படம். சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவந்தது. இதனையும் சுகுமாரே இயக்கியிருக்கிறார். இதிலும் அப்படியே புஷ்பா டீம் ஒர்க் செய்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவந்தது. இடையில் இயக்குநருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் பிரச்னை என்ற தகவலும் பரவியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஒருவழியாக படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கிறது.
டிசம்பர் 5ல் ரிலீஸ்: முதலில் படமானது ஆகஸ்ட் மாதம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அல்லு அர்ஜுனின் லேடி கெட்டப்பும் கொஞ்சம் ட்ரோலுக்கு உள்ளானது. எது எப்படியோ படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அல்லு ரசிகர்கள். சூழல் இப்படி இருக்க படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன.
அல்லு அர்ஜுன் கெத்து: அந்தவகையில் நேற்று சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நடந்தது. இதில் கிஸ்ஸிக் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ஸ்ரீலீலா நடனம் ஆடியிருக்கிறார். இந்நிலையில் அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், 'நான் ஒரு பக்கா சென்னை பையன். நான் நேஷனல், இன்டர்நேஷனல் என எங்கு சென்றாலும் சென்னைதான் எனது வேர். இங்குதான் எனது முதல் 20 வருடங்கள் கழிந்தன. அதனால் இந்த ஊர் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான். நான் ஒரு பக்காவான சென்னை பையன். எனது நண்பர்களுடன் அமர்ந்து பேசும்போது லோக்கல் சென்னை பாஷையெல்லாம் பேசுவேன்' என்றார்.
அப்போது அவரிடம் அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அல்லு அர்ஜுனோ, 'நான் தமிழில்தான் பேசுவேன். அது இந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை' என்று குறிப்பிட்டார். அல்லு அர்ஜுன் சென்னையில்தான் பள்ளி படிப்பை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் தமிழ் மண்ணுக்கு மரியாதை செய்வேன் என்று கூறியதை தமிழ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











